Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோவா கடற்கரையில் விக்ராந்த் INS கடற்படை கப்பலில் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி

கோவா: INS விக்ராந்த் கடற்படை கப்பலில் பிரதமர் மோடி தனது தீபாவளியை கொண்டாடினார். கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கடைபிடித்து வருகிறார். அந்த வகையில், பஹல்‌காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற சிறப்பான வெற்றியை கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதனால், இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடினார். அப்போது வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “துணிச்சலான வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுவதை பாக்கியமாக கருதுகிறேன்.

பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் கொடுத்தது. ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் நேற்று இரவு தங்கியிருந்த நினைவுகள் மறக்க முடியாதவை. போர்க்களத்தில் வீரர்களின் செயல்பாட்டை சொற்களால் விவரிக்க முடியாது. வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என்றார். பிரதமர் மோடி, கடந்த 2014-ல் லடாக்கில் உள்ள சியாச்சின் பனிப் பிரதேசத்திற்கு சென்று அங்கு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார். 2015-ல், 1965-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா–பாகிஸ்தான் போரில் நமது வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள டோக்ராய் போர் நினைவுச் சின்னத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்றார். 2024-ல் குஜராத்தின் சர்க்ரீக்கில் ராணுவத்தினருடன் தீபாவளியை கொண்டாடினார் என்பது நினைவுகூரத்தக்கது.