கோவாவில் சதுரங்க வேட்டை 5வயது முதல் அசராத பயிற்சி: உலக கோப்பை செஸ் மகுடம் சூடுவார் பிரனேஷ்: காரைக்குடி அங்கன்வாடி ஊழியரான தாய் நெகிழ்ச்சி
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், உலகக்கோப்பை செஸ் போட்டி கடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 13வது உலக கோப்பை செஸ் போட்டி, கோவாவில் கடந்த அக்.31ம் தேதி தொடங்கியது. நவ.26 வரை போட்டிகள் நடக்க உள்ளன. இந்தியாவில் கடந்த 2002ம் ஆண்டு ஐதராபாத்தில் உலக செஸ் போட்டி நடந்தது. அதற்கு பின் 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இந்தியாவில் நடப்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை கோவா தொடருக்கு இந்தியாவில் இருந்து குகேஷ் தலைமையில் 24 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகம் சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, பிரனேஷ் உட்பட 8 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரனேஷ் இம்முறை அதிகம் எதிர்பார்க்கப்படுகிறார். எளிமையான குடும்பத்தில் பிறந்த பிரனேஷ், விஸ்வநாதன் ஆனந்த் போல சர்வதேச புகழ் பெற்ற வீரராக ஜொலிப்பார் என கணிக்கப்படுகிறது. அவரைப்பற்றி பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் முனிரத்னம். ஜவுளிக்கடை ஊழியர். மனைவி மஞ்சுளா. காரைக்குடி அருகே கண்டனூர் பாலையூர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர்களது மூத்த மகன் தினேஷ் ராஜன்(21). செஸ் பிடே மாஸ்டர். 2வது மகன் பிரனேஷ்(18). சிறுவயதில் இருந்து செஸ் போட்டியில் பங்கேற்று வரும் பிரனேஷ் 2023ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். இவர் சென்னையில் நடந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் சேலஞ்சர் பிரிவில் முதல் இடம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாஸ்டர் பிரிவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். மேலும், 2022ல் காமன்வெல்த் செஸ் போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தங்கம், ஓபன் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். செரிபியாவில் நடந்த அதிவிரைவு செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. கத்தாரில் நடந்த சர்வதேச இன்டர்நேஷனல் சாம்பியன் போட்டியில் உலகில் தலைசிறந்த வீரரான கார்ல்சனை எதிர்கொண்டு பிரனேஷ் விளையாடினார்.
அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டி டிராவில் முடிந்தது. அதேபோல் உலகின் தலைசிறந்த வீரரான எர்கைசி அர்ஜூனுடனும் விளையாடி போட்டியை டிரா செய்தார். இது உலக அளவில் பிரனேஷ் சிறந்த பெயர் பெற காரணமாக இருந்தது. இதுபோல் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பிரனேஷ் தொடர் சாதனை படைத்து வருகிறார். தற்போது இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டு கோவாவில் நடக்கும் உலக கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறார். உலக அளவில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளார்.
உலக ஜூனியர் பிரிவில் டாப் 10க்குள் உள்ளார். இவரது தாய் அங்கன்வாடியில் பணியாற்றி வரும் நிலையில், அகிலமே பாராட்டும் வகையில் அசத்தி வரும் பிரனேஷின் பெற்றோரை சந்தித்தோம். இதுகுறித்து பிரனேஷின் தாய் மஞ்சுளா கூறுகையில், ‘‘நான் அங்கன்வாடி டீச்சராக பணியாற்றுகிறேன். வீட்டில் உறவினர்களுடன் செஸ் விளையாடிக் கொண்டிருப்போம். அப்போது சிறுவனாக இருந்த பிரனேஷ்க்கு, செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.
5 வயதிலேயே செஸ் விளையாட்டு குறித்து ஆர்வமுடன் எங்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார். அவரின் ஆர்வத்தை பார்த்துதான் நாங்கள் காரைக்குடியில் உள்ள ஒரு செஸ் அகாடமியை சேர்ந்த அதுலன் என்பவரிடம் பயிற்சிக்கு சேர்த்தோம். அங்கு 10 வயது வரை பயிற்சி எடுத்தார். அதன்பின்னர் சென்னையில் உள்ள செஸ் குருக்கள் அகாடமியில் கிராண்ட் மாஸ்டர் ஆர்.டி.ரமேஷிடம் 10 வயது முதல் தற்போது வரை தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறார்.
வீட்டில் நாங்கள் சாதாரண நிலையில் உள்ள குடும்பம்தான். இருப்பினும், பிரனேஷை உலக அளவில் சாதனையாளராக்க வேண்டுமென்று திட்டமிட்டு செயல்பட்டோம். அவர் படித்த பள்ளியிலும் ஊக்கமளித்தனர். அதன்விளைவுதான் 2023ல் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அடுத்தடுத்த போட்டிகளில் வென்று சாதனை படைத்து வரும் அவரை நினைத்து நாங்கள் பெருமை அடைந்துள்ளோம்.
தற்போது கோவாவில் நடக்கும் உலக கோப்பை செஸ் போட்டியில் 206 பேர் விளையாடுகின்றனர். இதில் இந்தியாவில் இருந்து 24 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரனேஷ் உட்பட 8 வீரர்களும் அடக்கம். உலககோப்பை போட்டியில் பிரனேஷ் கலந்து கொண்டு விளையாடுவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. வரும்போது வெற்றி கோப்பையுடன் வருவார் என எதிர்பார்க்கிறோம். பிரனேஷின் திறமையை மதித்து, அவரை தொடர்ந்து ஊக்கமளித்து பாராட்டி வரும் தமிழக அரசுக்கு மிக்க நன்றி’’, என்றார்.
* முதல்வர், துணை முதல்வர் ஊக்கத்தொகை தந்து உறுதுணை: தந்தை பெருமிதம்
தந்தை முனிரத்தினம் கூறுகையில், ‘‘எளிய குடும்பத்தில் பிறந்தாலும், மகனின் எதிர்காலம் வீணாகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எங்கு டோர்னமென்ட் நடந்தாலும் அழைத்துச் சென்று விடுவேன். ஒரு இடம் விடுவதில்லை. அங்கு கிடைத்த வெற்றி, பயிற்சிகளே அவனை ஊக்குவித்தன. மேலும், பிரனேஷ் இன்டர்நேஷனல் மாஸ்டர் ஆனபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
அதேபோல கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்திற்கு குடும்பத்தையே அழைத்து பாராட்டி ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். கடந்த ஆண்டு காரைக்குடியில் நடந்த விளையாட்டு வீரர்களுக்கான உபகரணம் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன் அருகே அமர வைத்துக் கொண்டார். பிரனேஷ் 5 வயதாக இருந்த போதே தினகரன் நாளிதழ் சிறப்பு கட்டுரை வெளியிட்டு அவரை வெளிக்கொண்டு வந்தது. அப்போது அவர் கூறியது போல் நிச்சயம் உலக செஸ் சாம்பியன் ஆவார்’’, என்றார்.
