சென்னை: அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள், வரும் 26ம் தேதி வரை தேர்ச்சி சான்றிதழை நேரில் பெற்றுக் கொள்ளலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள், மண்டல விநியோக மையங்களில் செப்.26ம் தேதி வரை தேர்ச்சி சான்றிதழை நேரில் பெற்றுக் கொள்ளலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. ‘கோவா’ (Computer Course in Office Automation - COA) எனப்படும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தால் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2024 ஆகஸ்ட் பருவ கணினி சான்றிதழ் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட மண்டல விநியோக மையங்களில் உரிய ஆதாரங்களை (அடையாள சான்று, ஹால்டிக்கெட், ஆதார் அட்டை) காண்பித்து செப்.26ம் தேதி வரை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட தேதிக்குள் விநியோகிக்கப்படாமல் உள்ள சான்றிதழ்களை மண்டல விநியோக மைய அதிகாரிகள், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு மீண்டும் அனுப்புமாறு, தொழில்நுட்பக் கல்வி இயக்கக உதவி இயக்குநர் (தேர்வுகள்) பிரபாகரன் தெரிவித்துள்ளார்.