Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் மீது எஸ்ஐடி குற்றப்பத்திரிகை

* ஒருவர்தான் குற்றவாளி என கமிஷனர் அருண் சொன்னது சரியா?

* யார் அந்த சார் என்பது உண்மையா?

* ஓரிரு நாளில் முடிச்சுகள் அவிழும்

சென்னை: சென்னை அண்ணாபல்லைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான ஞானசேரகன் மீது சிறப்பு புலனாய்வு குழு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து குற்றப்பத்திரிகை நகல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட பின்னர்தான் போலீஸ் கமிஷனர் சொன்னபடி ஒருவர்தான் குற்றவாளியா? யார் அந்த சார் என்பது உண்மையா என்பது தெரியவரும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 24ம் தேதி இரவு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், தனது காதலனான 4ம் ஆண்டு மாணவனுடன் தனியாக இருந்த போது, மர்ம நபர் ஒருவர் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து, மாணவனை விரட்டி அடித்துவிட்டு மாணவியை மிரட்டி ‘பாலியல் தொந்தரவு’ செய்தார்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு நடந்த சம்பவத்தை அவசர காவல் கட்டுப்பாட்டு எண் 100 உதவியுடன் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளி ஞானசேகரனை, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதேநேரம் இந்த வழக்கில் தொழில்நுட்ப பிரச்னையால் எப்ஐஆர் வெளியாகியது. அந்த எப்ஐஆரில், குற்றவாளி ஞானசேகரன் செல்போனில் ஒருவரிடம் சார் என பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் எதிர்க்கட்சிகள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர் யாருடன் போனில் பேசினான், அந்த சார் யார் என்று கூறி தொடர் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தினர்.

இதனால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த 24 மணி நேரத்தில் அறிவியல் பூர்வ ஆய்வின் அடிப்படையில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மாணவியை மிரட்டுவதற்காக தனது செல்போனில் ‘பிளைட் மோடில்’ வைத்து உனக்கு டிசி தர வைப்பேன் என்று கூறி சார், சார் என பேசுவதுபோல நடித்துள்ளார். இந்த வழக்கில் போலீசார் நடத்திய தற்போதைய விசாரணையின் மூலம் ஞானசேகரன் ஒருவன் மட்டும் தான் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கமிஷனர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது சென்னை போலீஸ் கமிஷனர் அரசிடம் முன் அனுமதி பெற்று பேட்டி அளித்தாரா? விசாரணை முடிவதற்கு முன் எப்படி ஒருவர் மட்டுமே குற்றவாளி என அவர் சொல்ல முடியும் என பல கேள்விகளை முன் வைத்து, காவல் துறை அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த வழக்கை விசாரணை நடத்த, 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ‘சிறப்பு புலனாய்வு குழு’ ஒன்று நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் போது அதை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள உயர் அதிகாரி, அதை கட்டுப்படுத்த பேட்டி அளிக்கலாம் என்றும், இதற்காக அரசிடம் முன் அனுமதி பெற தேவையில்லை என்று கூறி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து மாணவி பாலியல் வழக்கு தெடர்பான ஆவணங்களை பெற்றனர். பிறகு ஞானசேகரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி, வழக்கு தொடர்பாக லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், ஞானசேகரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்யும் வகையில் ஞானசேகரனை கடந்த 6ம் தேதி தடயவியல் அறிவியல் துறை அலுவலகத்தில் ஆஜர்படுத்தில், துணை இயக்குநர் சோபியா, உதவி இயக்குநர் நளினி நடராஜன், தொழில்நுட்ப பிரிவு அதிகாரி லட்சுமி நாராயணன் ஆகியோர் ஞானசேகரனிடம் 3 மணி நேரம் குரல் மாதிரி சோதனை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக மாணவியின் பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஞானசகேரன், பாதிக்கப்பட்ட மாணவி, அவரது காதலன் ஆகியோர் அளித்த வாக்குமூலம் மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணையின் மூலம் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட 60 நாட்களில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தங்களது முழு விசாரணையை நடத்தி முடித்து நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதுதொடர்பாக எந்த தகவல்களும் வெளி வரவில்லை. அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குற்றப்பத்திரிக்கை நகல் குற்றவாளி மற்றும் புகார் அறித்த மாணவி தரப்புக்கு அளிக்கப்படும் போது, எதிர்க்கட்சிகள் கடந்த 2 மாதங்களாக முன்வைத்து வரும் ‘யார் அந்த சார்’ என்பதற்கான விடை கிடைக்கும். மேலும், சென்னை பெருநகர காவல்துறையில் புலன் விசாரணையில், போலீஸ் கமிஷனர் அருண் மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்று தெரிவித்திருந்தார். அதற்கும் பதிலும் விரைவில் தெரியவரும் என்று எதிர்பாக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சி மற்றும் சென்னை பெருநகர காவல்துறை மீது திட்டமிட்டு அடுக்கடுக்கான குற்றாச்சாட்டுக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையின் மூலம் நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.