Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 நிமிடத்தில் ஒட்டும் அதிசய பசை; எலும்பு முறிவுக்கு இனிமேல் அறுவை சிகிச்சை தேவையில்லை: சீன விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

பீஜிங்: சீனாவில் வெறும் 3 நிமிடங்களில் உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கும் மருத்துவ பசை கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவ உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எலும்பு முறிவு சிகிச்சையில், உடைந்த எலும்புகளை மீண்டும் இணைக்கவும், எலும்பியல் கருவிகளைப் பொருத்தவும் குறிப்பிட்ட பசையைக் கண்டுபிடிப்பது என்பது மருத்துவ உலகின் நீண்ட கால கனவாக இருந்து வந்தது. கடந்த 1940ம் ஆண்டுகளில் ஜெலட்டின் மற்றும் பிசின் கொண்டு உருவாக்கப்பட்ட பசைகள், உயிரியல் ரீதியாக உடலுடன் பொருந்தாத தன்மை காரணமாக நிராகரிக்கப்பட்டன.

தற்போது சந்தையில் எலும்புகளை இணைக்கும் சிமெண்ட்கள் மற்றும் இடைவெளிகளை நிரப்பும் கலவைகள் பயன்பாட்டில் இருந்தாலும், அவற்றுக்கு உண்மையான ஒட்டும் தன்மை கிடையாது. இந்தச் சூழலில், சீன விஞ்ஞானிகள் புதியதொரு பசையைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள சர் ரன் ரன் ஷா மருத்துவமனையின் எலும்பியல் நிபுணர் லின் சியான்ஃபெங் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், ‘போன் 02’ என்ற புதிய மருத்துவப் பசையை உருவாக்கியுள்ளனர். கடலுக்கு அடியில் பாலங்களில் சிப்பிகள் உறுதியாக ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டதன் மூலம் இந்த பசையை உருவாக்கும் எண்ணம் தனக்குத் தோன்றியதாக லின் சியான்ஃபெங் குறிப்பிட்டார்.

இந்தப் பசை, ரத்தம் நிறைந்த சூழலிலும் மூன்று நிமிடங்களுக்குள் உடைந்த எலும்புகளைத் துல்லியமாக ஒட்டவைக்கும் திறன் கொண்டது. எலும்பு குணமடையும்போது, இந்தப் பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்பட்டுவிடும். இதனால், சிகிச்சைக்குப் பின் பொருத்தப்பட்ட உலோகத் தகடுகள் மற்றும் ஆணிகளை அகற்ற மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதுவரை 150க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் இந்தப் பசை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உலோகத் தகடுகளுக்கு மாற்றாக இந்தப் பசை எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட்டு, அதனால் ஏற்படும் தொற்று மற்றும் பிற அபாயங்களைக் குறைக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.