Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரின் கட்டுமான பணிக்காக கண்ணாடி கூண்டு பிரிப்பு துவக்கம்

* 40 நாளுக்கு தேர் வேலை நடக்கும்

* ஏப்ரல் 7ம் தேதி தேரோட்ட விழா

திருவாரூர் : திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழா வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி நடைபெறுவதையொட்டி தேரின் கட்டுமான பணிக்காக கண்ணாடி கூண்டுகள் பிரிக்கும் பணி நேற்று நடைபெற்றது.

திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது.

மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். இந்த திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித் தேரானது மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம்,வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும்.

மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4அடி உயரமும்,3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆழித்தேரோட்டம் என்பது ஆரம்ப காலத்தில் தியாகராஜருக்கு உகந்த நட்சத்திரமான பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில் அதன்பின்னர் காலபோக்கில் நிர்வாக வசதி மற்றும் பொருளாதார வசதியை கணக்கில் கொண்டு பல்வேறு தேதிகளில் நடத்தப்பட்டு வந்ததது.

இந்நிலையில் இந்த ஆழித்தேரோட்டத்தை ஐதீக முறைப்படி பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் தான் நடத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரையில் தொடர்ந்து 4 ஆண்டு காலமாக பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டிலும் இந்த பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரமானது வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி வரும் நிலையில் இந்த தேதியில் தேரோட்டம் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக தைபூச நாளில் பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சியானது நடைபெறும் நிலையில் கடந்த 11ம் தேதி தியாகராஜசுவாமி கோயிலிலிருந்து திருஞானசம்பந்தர் எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் இந்த ஆழித்தேர் கட்டுமான பணிக்கு குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு மேல் தேவை என்ற நிலையில் இதற்காக ஆழித்தேரின் கண்ணாடி கூண்டுகளை பிரிக்கும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.