சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பேச்சாளர் முகாம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த பயிற்சி முகாமில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பேச்சாளர்களுக்கு சான்றிதழை வழங்கினார். தொடர்ந்து ஜி.கே.வாசன் அளித்த பேட்டி: கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வைக்க வியூகங்களை வகுத்துள்ளோம்.
அதிமுக-தேஜ கூட்டணிக்கு ஒத்தக் கருத்துடைய கட்சிகள் வரவேண்டும். தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில் பல மாற்றங்கள் ஏற்படும். உண்மை நிலைக்கேற்றவாறு கட்சிகள் கூட்டணியில் புதிதாக வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அதிமுகவில் இருக்கக் கூடிய சிறுசிறு பிரச்னைகள் எல்லாம் தற்காலிகமானது. வரும் நாட்களில் ஒத்த கருத்து உடையவர்களாக தேர்தலை சந்திக்க கூடிய நிலை ஏற்படும் என நம்புகிறோம். எங்கள் கட்சியின் பலம் மற்றும் மரியாதையை கூட்டணி கட்சி புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு கட்சியும் புதிதாக ஆரம்பிக்கும்போது மிகப்பெரிய உற்சாகம் இருக்கும். அதேபோன்ற ஆரம்பம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.