பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கள்ளக்காதலியை கழுத்து நெரித்துக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வாய்க்காலில் வீச்சு: பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது
புதுச்சேரி: வில்லியனூரில் கொடுத்த கடனை திருப்பி கேட்டு கள்ளக்காதலியை கழுத்து நெரித்துக் கொன்ற பர்னிச்சர் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட வி.மணவெளி செந்தாமரை நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வி(41). குடும்ப பிரச்னையால் கடந்த 2020ல் கணவர் பரத்ராஜிடம் இருந்து விவாகரத்து பெற்றார். ஜீவனாம்சம் மூலமாக கிடைக்கும் பணத்தில் பிளஸ்1 பயிலும் தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். தமிழ்ச்செல்வி தினமும் ஒதியம்பட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு மகளை அழைத்துச் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
அதன்படி கடந்த 5ம்தேதி மகளை பள்ளியில் விட்டு சென்றார். ஆனால் மாலையில் பள்ளிக்கு வந்து அழைத்து செல்லவில்லை. இதனால் பள்ளி நிர்வாகம் தரப்பில் தமிழ்செல்வியின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழ்செல்வியின் சகோதரர் மதன்ராஜ்க்கு தகவல் தெரிவிக்கவே, பள்ளிக்கு விரைந்து வந்த அவர், தனது அக்கா மகளை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.பின்னர் அக்கா வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கும் தமிழ்ச்செல்வியை காணாததால் அதிர்ச்சியடைந்த இருவரும் பல்வேறு இடங்களில் அவரை தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து வில்லியனூர் காவல் நிலையத்தில் தனது அக்காவை காணவில்லை என மதன்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
தமிழ்செல்வியின் செல்போன் எண்ணுக்கு யார், யார் பேசினர் என்பதை ஆய்வு செய்தனர். அவரிடம் பேசியவர்களின் அனைவரின் எண்ணுக்கும் போலீசார் போன் செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஒருவர் மட்டும் போலீசாரின் அழைப்பை எடுக்கவில்லை. இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஒதியம்பட்டு, ரங்கசாமி நகரை சேர்ந்த பர்னிச்சர் கடை வைத்திருக்கும் ஐயப்பன்(45) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தமிழ்செல்வியை கொன்றதை ஐயப்பன் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:தமிழ்ச்செல்வியை அங்குள்ள கோயிலில் அவ்வப்போது பார்த்த ஐயப்பன் அவருடன் நட்பாக பேசி பழகி வந்துள்ளார். இது தகாத உறவாக மாறியுள்ளது. அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.மேலும், தனது குடும்ப செலவுக்கு ஐயப்பனிடம், தமிழ்செல்வி பணம் வாங்கி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கியிருந்த தமிழ்செல்வி, கடந்த 5ம்தேதி மகளை பள்ளியில் விட்டுவிட்டு ஐயப்பனை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஐயப்பன், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ஐயப்பன், தமிழ்ச்செல்வியை தாக்கியதோடு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சம்பவத்தை மறைக்க திட்டமிட்ட ஐயப்பன், தமிழ்ச்செல்வியின் உடலை ஒரு பாலித்தீன் சாக்கு பையில் கட்டி, வில்லியனூர் கோர்க்காடு பகுதியிலுள்ள (விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலை அருகே) குடுவை ஆற்றின் வாய்க்காலில் வீசிவிட்டு சென்றுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஐயப்பனை போலீசார் அழைத்துச் சென்று துர்நாற்றம் வீசியநிலையில் சாக்கு மூட்டையை போலீசார் கைப்பற்றினர். அதிலிருந்து தமிழ்ச்செல்வி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு ேபாலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், ஐயப்பனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


