14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை சித்தப்பாவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை: சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
சென்னை: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த வழக்கில் சித்தப்பாவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(39). இவரது மனைவி தனலட்சுமியின் அக்கா, கணவரை பிரிந்து வேறொருவருடன் சென்று விட்ட நிலையில் அவரது 14 வயது குழந்தையை தனலட்சுமி வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மனைவியின் அக்கா மகளான 14 வயது சிறுமியை யிடம் வினோத் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் வினோத் வெளிநாட்டிற்கு கொத்தனார் வேலைக்கு சென்று விட்டார். கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி தனலட்சுமி பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அக்கா மகளை தனது கணவர் வினோத் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்தார்.
அதே நேரத்தில் கணவர் வெளிநாடு சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வினோத்தை பட்டாபிராம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. திருவள்ளூரில் சிறப்பு போக்சோ நீதிமன்றம் செயல்பட தொடங்கியதையடுத்து வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. வினோத் சிறுமியை மிரட்டியதால் கடந்த 2021ம் ஆண்டு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் டி.விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், சிறுமியை பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும்,
உறவுக்காரன் என்ற முறையை பயன்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் என மொத்தம் 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் சிறுமியின் சித்தி தனலட்சுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கும் நீதிபதி உமா மகேஸ்வரி பரிந்துரை செய்தார். இதையடுத்து, போலீசார் வினோத்தை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.