பெரம்பூர்: சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். எண்ணூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார் (26) என்பவருக்கும், பெசன்ட்நகர் மாதா ஆலயத்தில் கடந்த மாதம் 24ம் தேதி, பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் சிறுமிக்கு விருப்பமில்லாததால், தனது தோழிகளுடன் சேர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி, சிறுமியை மீட்டு 5 நாள் காப்பகத்தில் தங்கவைத்தனர்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், குழந்தைகள் நல ஆர்வலர் புகார் அளித்தார். அதன்பேரில், குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் விக்னேஷ்குமார், அவரது தந்தை தட்சிணாமூர்த்தி, தாய் பரமேஸ்வரி உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.