Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற விவகாரம்: கேரள நடிகையிடம் திருமங்கலம் போலீசார் 6 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை

அண்ணாநகர்: சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் தொடர்பாக கேரள நடிகையிடம் திருமங்கலம் போலீசார் 6 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியை சேர்ந்தவர் மினு முனீர் என்கிற மினு குரியன் (52). இவர் கடந்த 2008ம் ஆண்டு கேரளாவில் சின்னத்திரை மூலம் அறிமுகமாகி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மினு முனீர், தனது உறவினர் மகளான 14 வயது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு அழைத்து வந்தார். திருமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 4 பேர், சிறுமியிடம் தவறாக நடந்துள்ளதாக தெரிகிறது. இதனால் சிறுமி நைசாக கேரளாவுக்கு தப்பி சென்றார்.

இந்நிலையில்தான் கேரளா அரசு சார்பில், ஹேமா கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு திரைப்படத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் கொடுத்தனர். இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியும் கடந்த 2024ம் ஆண்டு கேரளா போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் திருமங்கலம் என்பதால் இந்த வழக்கை கேரள போலீசார், திருமங்கலம் போலீசாருக்கு மாற்றினர். திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடிகை மினு முனீர் மீது போக்சோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், கேரளாவுக்கு சென்று நடிகை மினு முனீரை அதிரடியாக கைது செய்து ரயில் மூலம் திருமங்கலத்துக்கு அழைத்து வந்தனர். முதலில் புகார் அளித்த சிறுமியிடம் விசாரணை தொடங்கியது. அவர் அளித்த வாக்குமூலத்தில், சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி 14 வருடத்துக்கு முன் சென்னைக்கு அழைத்து வந்தனர். சினிமாவில நடிக்க போகிறேன் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தேன். ஆனால் நான் தங்கியிருந்த அறைக்கு வந்த 4 பேர், பாலியல் தொல்லை கொடுக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து கேரளாவுக்கு தப்பி சென்றேன். அந்த 4 பேரை நேரில் பார்த்தால் அடையாளம் காட்டுவேன்’ என்றார். மேலும் 4 பேர் தவறாக நடக்க முயன்றது பற்றி அந்த சிறுமி நடித்து காட்டினார்.

அதன் பின்னர் நடிகையிடம் விசாரணை தொடங்கியது. சிறுமி எப்படி தெரியும், சினிமாவில் நடிக்க வைப்பதாக லாட்ஜுக்கு அழைத்து வந்தது ஏன்? அங்கு வந்த 4 பேரும் சினிமா தயாரிப்பாளர்களா? அல்லது சினிமா உலகை சேர்ந்தவர்களா? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். தொடர்ந்து 6 மணிநேரம் விசாரணை நடந்தது. வழக்கு முடியும் வரை எங்கும் செல்ல கூடாது என்று போலீசார் கூறினர். இதையடுத்து விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று கடிதம் மூலம் எழுதி கொடுத்துவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அதேபோல் நடிகை மீது புகார் அளித்த பெண், விசாரணை முடிந்து கேரளாவுக்கு சென்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ரகசியமாக விசாரணை யை தீவிரப்படுத்தியுள்ளார்.