புவனேஸ்வர்: ஒடிசாவில் பாலியல் பலாத்கார முயற்சியைத் தடுத்த சிறுமியின் வீட்டிற்கு, ஆத்திரத்தில் தீ வைத்த குற்றவாளியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒடிசா மாநிலம், சுந்தர்கட் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, முகேஷ் சிங் என்ற குற்றப் பின்னணி கொண்ட நபர், நள்ளிரவில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். சிறுமியும் அவரது பெற்றோரும் சுதாரித்துக்கொண்டு அவனை எதிர்த்ததால், முகேஷ் சிங் அங்கிருந்து தப்பியோடினான்.
இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த முகேஷ் சிங், மீண்டும் அன்று இரவே சிறுமியின் வீட்டிற்கு வந்து, அவர்களது தகரக் கூரை வேய்ந்த வீட்டிற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினான். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், சிறுமியின் மாண்புக்குக் களங்கம் விளைவித்தல், தீ வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முகேஷ் சிங் மீது வழக்குபதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
