பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டான். பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி விட்டு சிறுமியை வீட்டிற்கு அனுப்பி விட்டார். அழுதுகொண்டு வந்த சிறுமியை தாய் குளிக்க வைத்தபோது நடந்ததை சிறுமி தாயிடம் கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், காயமடைந்த மகளை பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்த்தார். மேலும் இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவனை திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.