*குடியாத்தம் அருகே சோகம்
குடியாத்தம் : குடியாத்தம் அருகே தென்னை மரம் வெட்டியபோது விழுந்து மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் தாக்கி சிறுமி பலியானார். அங்கிருந்த நாயும் பரிதாபமாக இறந்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் குமரன்.
இவரது மனைவி ஜானகி. இவர்களது 3வது மகள் நவியா(5). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவரது வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தை தொழிலாளர்கள் வெட்டியுள்ளனர். அப்போது தென்னை மரம் சாய்ந்து அங்குள்ள மின்கம்பம் மீது விழுந்தது.
இதனால் மின்கம்பம் கீழே சாய்ந்து மின்கம்பிகளும் அறுந்து விழுந்தது. இதில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி நவியா மீது மின்கம்பிகள் விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து நவியா தூக்கி வீசப்பட்டார். உடேன அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி நவியா இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின்ஊழியர்கள் மின்கம்பத்தை அப்புறப்படுத்தினர்.
அப்போது அங்கிருந்த தெருநாயும் மின்சாரம் பாய்ந்து பலியானது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மின்சாரம் பாய்ந்து இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.