ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடியுடன் ஏற்பட்ட காதலை பெற்றோர் கண்டித்ததால் மன முடைந்து சிறுமி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். திடீரென படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுமியை காணவில்லை என சோமங்கலம் போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்படி போலீசார், சந்தேகத்தின் பேரில் நல்லூர் பகுதியை சேர்ந்த நவமணி என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நவமணி, பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, நவமணியை போலீசார் கைது செய்தனர். மேலும் நவமணி மீது சோமங்கலம், மணிமங்கலம் காவல்நிலையங்களில் 2 கொலை வழக்கு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நவமணியை சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த நவமணியுடன் மீண்டும் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவர் வீடும் ஒரே தெருவில் இருப்பதால் நவமணி வீட்டிற்கு சிறுமி அடிக்கடி சென்று வந்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், நவமணியிடம் பழகுவதை கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் நவமணி வீட்டிற்கு சென்ற சிறுமி, யாரும் இல்லாத நேரத்தில் படுக்கையறையில் உள்தாழ்பாள் போட்டுகொண்டு மின்விசிறியில் தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரமாக கதவை திறக்காததால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் கதவை கட்டியுள்ளனர்.
பின்னர், ஜன்னல் வழியாக பார்த்தபோது சிறுமி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


