கிரிவலம் முடிந்து சொந்த ஊர் திரும்பும் பக்தர்கள்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல்
திருவண்ணாமலையில் கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமான பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வலக்கம். அதன்படி ஆவணி மாதம் பௌர்ணமியானது இன்று அதிகாலை 1.46 மணிக்கு தொடங்கியுள்ளது.
தொடர்ந்து நாளை அதிகாலை 12.30 மணி வரை கிரிவலம் வரலாம் என திருக்கோவில் நிர்வாகத்தினர் அறிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதலே பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவியத்தொடங்கியுள்ளனர். அவ்வாறு நேற்று இரவு முழுவதும் கிரிவலம் வந்த பக்தர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை முதல் கத்திருந்தனர். குறிப்பாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தின் நடைமேடைமுழுவதும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை மார்க்கமாக திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் வந்தடைந்தவுடன் ரயில் ஏறுவதற்காக காத்திருந்த மக்கள் ஒவ்வொருவரும் முண்டியடித்து செல்ல்கின்றனர். இதனால் ரயில் இருந்து இறங்க கூடிய மக்களும் இறங்க முடியாமல் தவிக்கின்றனர்.
ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தில் இந்த சூழல் நிலவுவதால் கூடுதல் சிறப்பு ரயில்களை ஒன்றிய அரசு இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.