ரசாயன பூச்சிக்கொல்லிகளை விட இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளால் பயிர்களுக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்கப்படும். ஒருமுறை உயிர்ம இடுபொருட்களைக் கொண்டு பூச்சிக்கொல்லி தயாரித்து தெளிக்கலாம். பின்னர் அடுத்தமுறை வேப்ப எண்ணெய் அல்லது புங்கன் எண்ணெய் தயாரித்து தெளிக்கலாம். இந்த முறையில் மாற்றி மாற்றி தெளிப்பதன் மூலம் பூச்சி நோய் கட்டுப்படும். பூச்சி நோய் தாக்குதல் வருமுன் காப்பாக தெளிப்பு செய்யும்போது வெளி இடுபொருட்களைக் குறைந்த அளவிலும், தாக்குதல் அதிகமாக இருக்கும் பாதகமான சூழலில் வெளி இடுபொருட்களை அதிக அளவிலும் பயன்படுத்த வேண்டும். இஞ்சி சாகுபடியில், பாதகமான சூழலில் மெது அழுகல் நோய் தாக்குதல் மிக அதிகமாக இருக்கும் நேரங்களில் நுண்ணுயிர் கலவை உரம் தயாரித்து அதில் பயன்படுத்தப்படும் உயிர்ம இடுபொருட்களின் அளவுகளை இரட்டிப்பாக்கி பயன்படுத்த வேண்டும். மெதுஅழுகல்நோய் தாக்குதல் துவங்கிய பகுதிகளில் உள்ள பயிர்களுக்கு நுண்உயிர்கலவை உரத்தை வாரம் ஒருமுறை வீதம் 3 முறைகள் பயன்படுத்த வேண்டும்.
நோய் தாக்கிய பயிர் அருகில் 12 செ.மீ குழி எடுத்து, அதில் நுண்ணுயிர் கலவை உரம் இட்டு மண்ணால் மூடி விட வேண்டும். அதன் மேல் சருவு மூடாக்கும் பரப்ப வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மெது அழுகல் நோய் மற்ற பயிர்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்த இயலும். அதாவது “நுண் உயிர் கோட்டை சுவர்” பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றிலும் அமைக்கப்படுகிறது. இது இயற்கை வேளாண் முறையில் மட்டும் தான் சாத்தியமாகும்.
அறுவடை
இஞ்சியை பச்சையாக விற்பதற்கு, விதைத்த 6ம் மாதம் முதல் அறுவடை செய்யத் துவங்க வேண்டும். நன்கு காய்ந்த இஞ்சி தயாரித்து விற்பனை செய்ய, விதைத்த 245-250 நாட்களில் அறுவடை செய்யலாம். பச்சை இஞ்சியாக விற்பனை செய்ய இஞ்சி அறுவடை செய்தவுடன் அவற்றை நீரில் நன்கு கழுவி மண் மற்ற அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் வெய்யிலில் ஒருநாள் முழுமையாக உலர்த்தி இஞ்சியின் மேல் ஈரப்பதம் உலர்ந்த பின்னர் விற்பனை செய்ய வேண்டும். காய்ந்த இஞ்சி அறுவடை செய்ய அதன் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய துவங்கும். இந்த நிலையில் அறுவடை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
