Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டின் வீரமிக்க வரலாற்றை உலகுக்கு எடுத்துரைக்கும் கட்டமைப்பு செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழ்நாட்டின் வீரமிக்க வரலாற்றை உலகுக்கு எடுத்துரைக்கும் கட்டமைப்பு செஞ்சி கோட்டை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். செஞ்சி கோட்டையை உலக புராதன சின்னமாக UNESCO அறிவித்தது. இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; செஞ்சி கோட்டை, தமிழ்நாட்டின் வீரமிக்க வரலாற்றையும், பண்பாட்டுப் பெருமையையும் உலகுக்கு எடுத்துரைக்கும் ஒரு மாபெரும் அரண் கட்டமைப்பு. இன்று, யுனெஸ்கோ இந்த வரலாற்று சிறப்புமிக்க கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவித்திருப்பது, பெருமிதமும் மகிழ்ச்சியும் தருகிறது.

இந்த அறிவிப்பு இந்த கோட்டையின் மாண்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. இக்கோட்டையானது, கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர் தங்குமிடங்கள் மற்றும் நெற்களஞ்சியம் ஆகியவற்றுடன், விஜயநகரப் பேரரசு, மராட்டியர், முகலாயர், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிகளின் கீழ் ஒரு முக்கிய படைத்தளமாக விளங்கியது. இக்கோட்டையின் அழிவில்லாத கட்டமைப்பும், மூன்று மலைகளை அரணாகக் கொண்டு பரந்து விரிந்திருக்கும் அதன் வலிமையும், தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்கு பறைசாற்றுகிறது.

இந்தக் கோட்டை உலகெங்கிலுமிருந்து வரலாற்று ஆர்வலர்கள், பயணிகள் மற்றும் ஆய்வாளர்களை ஈர்க்கும் ஒரு மையமாக மாறும். செஞ்சி கோட்டையின் புகழ், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், அதன் வீர வரலாற்றையும், கலைநயத்தையும் உலக மேடையில் பிரகாசிக்கச் செய்யும் என்று கூறினார்.