Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி: தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளன. நடுவில் மட்டுவார்குழலம்மையுடன் தாயுமான சுவாமி அருள் பாலிக்கிறார். இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான இன்று அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. காலை 9 மணியளவில் உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையை கொண்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ படையலிட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்காக நேற்று காலையில் இருந்தே கோயில் மடப்பள்ளி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக் காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்தனர். பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணி நேரம் ஆவியில் வேகவைத்தனர். இன்று காலை 9.30 மணிக்கு இந்த மெகா கொழுக்கட்டையை கோயில் பணியாளர்கள் ஒரு துணியில் தொட்டில் போல் கட்டி மடப்பள்ளியில் இருந்து தூக்கி சென்று உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ அளவிலான கொழுக்கட்டையை படையலிட்டனர். பின்னர் விநாயகருக்கு படையலிடப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே மலைக் கோட்டைக்கு பக்தர்கள் வர தொடங்கினர்.

ஆந்திராவில் ஷாம்பு, சோப்புகளால் விநாயகர் சிலை

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பாமிடியில் வழக்கமான சிலைகளை போல் அல்லாமல் சோப்புகள் மற்றும் ஷாம்புகளால் 8 அடி உயரத்திற்கு விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.25 ஆயிரம் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விநாயாகர், அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்ததுள்ளது. 3 நாட்கள் இந்த சிலையை வைத்து வழிபட்ட பின்னர், சோப்பு, ஷாம்பு ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என சிலையை நிறுதியுள்ள பக்தர்கள் தெரிவித்தனர்.

50 கிலோ பயனற்ற காகிதத்தில் விநாயகர் சிலை

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்து முண்ணனியின் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் 41வது ஆண்டாக புதுவை சாரம் அவ்வை திடலில் 21 அடி உயரத்தில் பிரமாண்டமாக விநாயகர் சிலை வைத்து இன்று மாலை 6 மணிக்கு பூஜை செய்யப்படுகிறது. இவ்விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர்.புதுவை மணக்குள விநாயகர் கோயில் உள்பட அனைத்து விநாயகர் கோயில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் மூஷிக வாகனத்தில் சாமி வீதியுலாவும் இரவு நடைபெறவுள்ளது. புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளியில் பயனற்ற காகிதங்களை குப்பையில் வீசாமல் 5 அடி உயரத்தில் ரசாயனம் எதுவுமின்றி, சுமார் 50 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தியுள்ளனர். இதனை பள்ளியில் பயிலும் சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.