புதுடெல்லி: பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி பள்ளம் தோண்டுதல், கட்டிட வேலைகள் உள்ளிட்ட கரடு முரடான பணிகள் செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால் விருந்தில் சமையல் பாத்திரத்தை கிளறி விடுவதற்காக பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்படுவதை பார்த்திருக்கிறீர்களா? அப்படிதான் ஒரு விசித்திர காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு விருந்து நிகழ்ச்சிக்காக ராட்சத அண்டாவில் குழம்பு வைக்கிறார்கள். அடிப்பிடிக்காமல் கிளறி விடுவதற்கு கரண்டிக்கு பதிலாக பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது எங்கு படமாக்கப்பட்டது என்பது பற்றிய விவரம் எதுவும் இல்லை. இது ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் கற்பனையாக உருவாக்கப்பட்டதா? என்றும் தெரியவில்லை. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ உடனடியாக சமூக வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் பார்வையை பெற்றுள்ளது. பொக்லைன் இயந்திரத்தின் பயன்பாட்டை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் மூழ்கி போனாலும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை கேள்வியாக எழுப்பினர்.