Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ் மணம் வீசிய ஜெர்மனி ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறுகிறது: விமானத்தில் பறந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்

சென்னை: தமிழ் மணம் வீசிய ஜெர்மனி என்ற தலைப்பில், விமானத்தில் பறந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜெர்மனியிலிருந்து லண்டனுக்கு விமானத்தில் பறந்து செல்லும் நேரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த முன்னேற்றத்தை மேலும் விரைவுபடுத்தி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சியைப் பெறுகிற வகையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையில் ஆகஸ்ட் 30ம்தேதி அன்று ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினேன்.

ஆகஸ்ட் 30ம் தேதி சனிக்கிழமை இரவு ஜெர்மனியின் டசெல்டோர்ப் விமான நிலையத்தில் தரையிறங்கினோம். அந்தப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று வரவேற்பளித்தனர். ஆகஸ்ட் 31ம்தேதி மாலையில் நம் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு நேரம். சந்திப்பு நிகழ்வு அரங்கிலும் மனதிலும் நிறைவடைந்த நிலையில், புகழ்பெற்ற கொலோன் தேவாலயத்திற்குச் சென்று அதன் பிரம்மாண்டக் கட்டமைப்பைக் கண்டேன். பின்னர் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்திற்குச் சென்றேன். டசல்டோர்ப் நகரில் 5 நிறுவனங்களுடன் தனித்தனிச் சந்திப்புகள். முதல் நிறுவனமாக உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்துடனான சந்திப்பு. தொடர்ந்து இ.பி.எம் பாப்ஸ்ட், நார்-ப்ரீம்ஸ், நார்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிற்கு ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பின் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் புறப்பட்டேன். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, “ஐரோப்பாவின் இதயத்துடிப்பாக ஜெர்மனி உள்ளது. அதுபோல இந்தியாவின் இதயத்துடிப்பு தமிழ்நாடு. இரண்டுமே உற்பத்தித் துறையை வளர்த்தெடுக்கும் அரசுகள். தமிழ்நாட்டில் நீங்கள் நம்பிக்கையுடன் முதலீடுகளை செய்யலாம்’‘ என்று கூறினார்.

வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு எனக்கு ஏற்பட்டது.26 நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் ரூ.7,020 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

செப்டம்பர் 2ம்தேதி காலையில் என்ஆர்டபிள்யூ மாநிலத்தின் மினிஸ்டர்-பிரசிடென்ட்டை சந்திக்கும் நிகழ்வு. மினிஸ்டர் பிரசிடென்ட் ஹென்ரிக் வுஸ்ட் என் மீது அன்பு கொண்டு, நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் தனது அரசின் உயரதிகாரிகளுடன் தனது கான்வாயையும் அனுப்பியிருந்தார். தமிழ்நாட்டின் முதல்வரான உங்களில் ஒருவனான எனக்கு ஜெர்மனி நாட்டின் ஒரு மாநிலத் தலைமை அமைச்சர் முழு மரியாதை அளித்து தன் இடத்திற்கு அழைத்ததை, தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட மரியாதையாகவே கருதுகிறேன்.

தமிழ்நாட்டின் பாரம்பரியப்படி ஹென்ரிக் வுஸ்ட்க்கு பட்டுத்துண்டு அணிவித்துச் சிறப்பித்தேன். பாரம்பரிய ஓவியம் ஒன்றையும் பரிசளித்தேன். அவரும் அவர்கள் மாநிலத்தின் பாரம்பரியப் பொருட்கள் அடங்கிய பரிசுக்கூடையை அன்புடன் வழங்கினார். தமிழ்நாடு அளவுக்கான மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடான ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்தில் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மாநிலத்தின் தலைமை அமைச்சருடன் கலந்துரையாடல் எனத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அனைத்தும் நிறைவேறிய மகிழ்வுடன், லண்டன் நகருக்கு விமானத்தில் பறக்கத் தொடங்கினேன்.

அங்கே உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், உலகின் ஒப்பற்ற சிந்தனையாளரான நம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து, சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டுப் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றுகிறேன். லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு. அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லண்டன் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.