Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2 நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அம்பாசமுத்திரம் மரச்செப்பு சாமான்களுக்கு‘புவிசார் குறியீடு’; ஒன்றிய அரசு அறிவிப்பு

நெல்லை: தமிழகத்தில் பாரம்பரியப் பொருட்களுக்கு ஒன்றிய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது. இதன்படி தற்போது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தின் புகழ்பெற்ற ‘மரச் செப்பு சாமான்கள்’ இடம் பிடித்துள்ளது. அம்பாசமுத்திரத்தில் சுமார் 2 நூற்றாண்டுகளாக மரத்தினாலான விளையாட்டுப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயாராகும் செப்பு சாமான்களின் சிறப்பம்சமே அவற்றின் நுணுக்கமான வேலைப்பாடுகள்தான். முன்பு இயந்திரங்களின் உதவி இன்றி, முழுக்க முழுக்கக் கைகளால் இழைத்து இவை உருவாக்கப்பட்டன. தற்போது சிறியரக இழைப்பான்கள் உதவியுடன் இங்கு தயாராகும் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், அம்மி, ஆட்டுக்கல், சிறிய மேஜை, நாற்காலிகள் மற்றும் குழந்தைகளை ஈர்க்கும் விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தும் மிக சிறிய வடிவில் தத்ரூபமாகச் செதுக்கப்படுகின்றன.

குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்படும் இந்தப் பொம்மைகள் செய்வதற்கு, உள்ளூர் மரவகைகளான மஞ்சள் கடம்பு, வேம்பு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை குழந்தைகளுக்கு எந்த தீங்கு விளைவிக்காத மரங்கள். இந்த நிலையில் அம்பை, பரணி மரவர்ண கடைசல் கைவினைஞர்கள் நலச்சங்கம் சார்பில் மரக்கடைசல் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கோரி ஒன்றிய அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. அதில் அச்சங்க தலைவர் காஸ்பர், ‘அம்பையில் மரசெப்பு சாமான்களை பாரம்பரியமாக செய்து வருகிறோம். இயந்திரமயமாக்கப்பட்ட பெரிய தனியார் நிறுவனங்கள் தரமற்ற செப்பு சாமான்களின் விற்பனையில் இருந்து காக்கவும் அம்பை செப்பு மரச்சாமான்களுக்கு சட்டப்பாதுகாப்பு அவசியம்’ என உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கைவினை கலைஞர்களின் இந்த கோரிக்கைக்கு ஆதரவும் பக்கபலமாகவும் நபார்டின் மதுரை வேளாண் வணிக அடைகாக்கும் மன்றம் செயல்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து வக்கீல் சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் அம்பை செப்பு சாமான்களுக்கான புவிசார் குறியீடு கிடைக்கவும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் பல்வேறு சட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த தொடர் நடவடிக்கைகளின் பயனாக வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாசமுத்திரம் செப்பு சாமான்களுக்கு புவிசார் குறியீட்டை ஒன்றிய அரசு தற்போது வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு, இந்திய அரசின் அறிவுசார் சொத்துரிமைத் துறையால் வெளியிடப்படும் புவிசார் குறியீடுகள் இதழில் இடம்பெற்றுள்ளது. அந்த இதழில் ‘அம்பாசமுத்திரம் செப்பு சாமான்கள் (மர விளையாட்டுப் பொருட்கள்)’’ என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம், அம்பாசமுத்திரத்தின் கைவினைஞர்களுக்கும் அவர்களின் கலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளது.

இந்திய புவிசார் குறியீடுகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்குவதன் மூலம் அவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்க இது உதவுகிறது. இந்த குறியீடு சர்வதேச சந்தைகளில் ஒரு நம்பகத்தன்மை சான்றிதழாகச் செயல்படுவதால், அம்பாசமுத்திரம் செப்பு சாமான்களை ஒரு பிரீமியம் கைவினைப் பொருளாக நிலைநிறுத்தி, அதன் தனித்துவத்தை மதிக்கும் வாடிக்கையாளர் பிரிவை அடைந்து அதிக விலை பெற இது வழிவகுக்கும்.