கெங்கவல்லி: கெங்கவல்லியில் மாரியம்மன் கோயிலில் மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி பேரூராட்சி கணவாய்க்காடு, கெங்கவல்லி-தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் ஸ்ரீ மாரியம்மன், கணபதி, சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் என்பவர் கோயில் பூசாரியாக உள்ளார்.
நேற்று இரவு பூஜைகள் முடிந்து வழக்கம் போல சிங்காரம், கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை முன்னாள் ராணுவ வீரர் மாணிக்கம் என்பவர் தனது விவசாய தோட்டத்திற்கு செல்லும் போது, மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட சென்றுள்ளார்.அங்கு கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கோயில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கோயிலில் குவிந்தனர். கோயில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக கெங்கவல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சாந்தி உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், கோயிலின் உண்டியலில் இருந்து ரூ.20 ஆயிரம் பணத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களின் உதவியுடன் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.