காசா மீது தாக்குதல் தீவிரமான நிலையில் 48 பிணைக்கைதிகளின் போட்டோவை வெளியிட்ட ஹமாஸ்: இஸ்ரேல் பெரும் கொந்தளிப்பு
காசா: காசாவில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், 48 பிணைக்கைதிகளின் ‘பிரியாவிடைப்’ புகைப்படத்தை ஹமாஸ் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காசாவில் இஸ்ரேல் தனது ராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பின் கஸ்ஸாம் பிரிகேட்ஸ் பிரிவு, 48 இஸ்ரேல் பிணைக்கைதிகளின் புகைப்படத்தை வெளியிட்டு, அதனை ‘பிரியாவிடைப் புகைப்படம்’ எனக் குறிப்பிட்டுள்ளது. உயிருடன் இருப்பவர்கள் மற்றும் ஏற்கெனவே உயிரிழந்தவர்களின் முகங்களை இணைத்து இந்தப் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்படத்தின் கீழும், 1986ம் ஆண்டில் லெபனானில் காணாமல் போன இஸ்ரேல் விமானப்படை வீரர் ‘ரான் அராத்’தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லையெனில், இந்தப் பிணைக்கைதிகளுக்கும் அதே கதிதான் ஏற்படும் என எச்சரிக்கும் வகையில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது. ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதியே இதற்குக் காரணம் எனவும் அந்தப் புகைப்படத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், ‘எங்கள் மீது தாக்குதல்கள் தீவிரமடைந்தால், உயிருடனோ அல்லது பிணமாகவோ எந்தக் கைதியையும் நீங்கள் பெற மாட்டீர்கள்’ எனவும் ஹமாஸ் எச்சரித்துள்ளது. காசாவின் மிகப்பெரிய நகரமான காசா சிட்டியில், இஸ்ரேல் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில்தான் ஹமாஸ் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நடந்த தாக்குதல்களில் மட்டும் 91 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸின் இந்தச் செயல், இஸ்ரேல் பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிணைக்கைதிகளை மீட்க இருதரப்பு ஒப்பந்தம் போட வேண்டும் என வலியுறுத்தி, டெல் அவிவ் நகரில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. ஆனால், முழுமையான போர் நிறுத்தத்தை உள்ளடக்கிய பேச்சுவார்த்தை முன்மொழிவுகளைப் பிரதமர் நெதன்யாகு தொடர்ந்து நிராகரித்து வருவதால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிப்பதாக ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஏமன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்; 31 பத்திரிகையாளர்கள் உடல் சிதறிப் பலி:
காசா போர் தொடங்கியதிலிருந்து, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீதும், செங்கடல் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் தலைநகர் சனா மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி, சனாவில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலக வளாகத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஹவுதி ஆதரவு பெற்ற ‘செப்டம்பர் 26’ மற்றும் ‘அல்-யெமன்’ உள்ளிட்ட மூன்று ஊடக நிறுவனங்கள் செயல்பட்டு வந்த அந்த வளாகத்தில், வாராந்திரப் பதிப்பின் இறுதிப் பணிகளில் பத்திரிகையாளர்கள் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 31 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மத்தியக் கிழக்கில் பத்திரிகையாளர்களை இஸ்ரேல் கொல்வது தொடர்கதையாகி வருவதாகவும், கடந்த 2023, அக்டோபர் 7ம் தேதி முதல் காசாவில் மட்டும் 247 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.