Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காசாவில் இனப்படுகொலை நடந்து வருவதாக ஐநாவின் விசாரணை ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லண்டன்: காசாவில் வாழும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் குண்டுவீசி கொல்வது இனப்படுகொலை என ஐ.நா. அறிவித்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான பிரச்னை, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய திடீர் தாக்குதலில் இருந்து உச்சக்கட்டத்தை எட்டியது. இந்தத் தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு, 250க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, ஹமாஸை முற்றிலுமாக அழிப்போம் எனச் சூளுரைத்த இஸ்ரேல், காசா மீது வரலாறு காணாத ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.

தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழிப் படையெடுப்பு காரணமாக காசா பெரும் அழிவைச் சந்தித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 37,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளுமாவர். இஸ்ரேலின் முற்றுகையால் உணவு, நீர் மற்றும் மருந்துப் பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். காசாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தேடுதல் வேட்டைகளும், யூதக் குடியேறிகளுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதல்களும் அங்கு அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

சர்வதேச அளவில் இந்தப் போர் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ராணுவ மற்றும் அரசியல் ஆதரவை வழங்கி வரும் நிலையில், உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்படும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாகப் போர் நிறுத்தத்தைக் கோரி வருகின்றன. தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கு தொடர்ந்துள்ளது. இதனிடையே, சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் சுதந்திரமான மனித உரிமை ஆணையக் குழு அமைக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின் தலைவராக முன்னாள் மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை நியமிக்கப்பட்டார்.

இக்குழு தனது விசாரணையை முடித்து 72 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில்; 2023 அக். தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம் இதுவரை 65,000 பாலஸ்தீனர்களை கொன்றுள்ளது. பாலஸ்தீனர்களை அழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் காசா மீது குண்டு வீசுகிறது. காசாவில் வாழும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் குண்டுவீசி கொல்வது இனப்படுகொலை என கூறியுள்ளது. பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை இனப்படுகொலை என ஐ.நா. அறிவிப்பது இதுவே முதல்முறை.