‘காசா’ பெயரை பயன்படுத்தி நூதன மோசடி; வசூல் வேட்டையில் ஈடுபட்ட சிரியா கும்பல் கைது: விமான நிலையத்தில் சுற்றி வளைத்த காவல்துறை
அகமதாபாத்: காசா மக்களின் பெயரைப் பயன்படுத்தி இந்தியாவில் சட்டவிரோத நன்கொடை வசூலில் ஈடுபட்ட சிரியா நாட்டைச் சேர்ந்த மூவர் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், காசாவில் லட்சக்கணக்கான மக்கள் உண்ண உணவு கிடைக்காமல் பரிதவித்து மாண்டு வருகின்றனர். இந்த நிலையில் காசா மக்களின் பெயரைப் பயன்படுத்தி, இந்தியாவில் சட்டவிரோதமாக நன்கொடை வசூலித்ததாக சிரியா நாட்டைச் சேர்ந்த மூவரை, டெல்லி விமான நிலையத்தில் அகமதாபாத் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த மாதம் இதே குற்றச்சாட்டில் இந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவர் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மற்ற மூவருக்கும் தேடுதல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், துபாய் வழியாக சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது ஜக்காரியா ஹைதம் அல்சார், அகமது ஓஹத் அல்ஹபாஷ் மற்றும் யூசுப் காலித் அல்சஹார் ஆகிய மூவரும் விமான நிலையத்தில் போலீசார் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். விசாரணையில், இவர்கள் மூவரும் சுற்றுலா விசா மூலம் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அகமதாபாத் வந்திறங்கி, ஷா ஆலம் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் சுமார் 12 நாட்கள் தங்கியுள்ளனர்.
பின்னர், ரயில் மூலம் டெல்லிக்குச் சென்று அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் இரண்டு வாரங்கள் தங்கி, உள்ளூர் மசூதிகளில் நன்கொடை வசூலிக்க முயன்றனர். தற்போது கைது செய்யப்பட்ட மூவரும் உறவினர்கள் என்றும், அவர்களில் ஒருவரான அகமது அல்ஹபாஷ் ஏற்கனவே இரண்டு முறை தனது குடும்பத்துடன் இந்தியாவிற்கு வந்து லக்னோ மற்றும் டெல்லி மசூதிகளில் நிதி திரட்ட முயன்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அகமதாபாத் குற்றப்பிரிவு உதவி ஆணையர் பாரத் படேல் கூறுகையில், ‘கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோத நிதி திரட்டலில் ஈடுபட்டதோடு, விசா விதிமுறைகளையும் மீறியுள்ளனர்’ என்று தெரிவித்தார்.