வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி அக்டோபர் 7ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். இதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்று உள்ளார். இது பற்றி பரிசீலித்து வருவதாக ஹமாஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிஎன்என் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த டிரம்ப்,‘‘ காசாவின் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் கைவிட மறுத்தால் ஹமாஸ் முழுமையான அழிவை சந்திக்க நேரிடும். ஹமாஸ் அமைதிக்கு உறுதிபூண்டுள்ளதா என்பது விரைவில் தெரியவரும்’’ என்றார்.
ராணுவ தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமெரிக்காவின் பரந்த திட்டத்திற்கு நெதன்யாகு உடன்படுகிறாரா என்று கேட்ட போது ‘‘அவர்(நெதன்யாகு) எங்களுடன் இருக்கிறார்’’ என்றார். இது தொடர்பாக சமூக ஊடகத்தில் அவர் பதிவிடுகையில், அமைதி ஒப்பந்தம் ஏற்பட ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய இஸ்ரேலுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.