தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில், நடந்த சர்வதேச மாநாட்டில் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜசீம் அல் தானி கலந்து கொண்டார். அப்போது ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசீம் பேசுகையில், அமெரிக்காவின் உதவியோடு நடத்தப்படும் காசா போர் நிறுத்தத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தில் உள்ளன. இருந்த போதிலும் போர் நிறுத்த உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை.
போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுத்து செல்ல மத்தியஸ்தர்கள் பணியாற்றி வருகிறார்கள். போர் நிறுத்தம் முழுமை அடையவில்லை. இஸ்ரேலிய படைகள் முழுமையாக திரும்ப பெறப்படும் வரையில் காசாவில் நிலைத்தன்மை ஏற்படாது என்றார். இதற்கிடையே,காசாவின் வடமேற்கு பகுதியில் நேற்று இஸ்ரேல் விமான படை தாக்குதல் நடத்தியதில் 2 பாலஸ்தீனர்கள் பலியானார்கள் என்று ஷிபா மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.


