ஜெருசலேம்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து,ஹமாஸ் பிடியில் இருந்த 20 இஸ்ரேல் பணயக்கைதிகள் முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதனைதொடரந்து இரு தரப்புக்கும் இடையே சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த முதல் கட்டமாக 7 இஸ்ரேல் பணயக்கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வுக்காக இஸ்ரேல் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
ஹமாசிடம் இருந்து, உயிருடன் உள்ள 20 பேர் மற்றும் உயிரிழந்த 28 பேரின் உடல்கள் என மொத்தம் 48 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இதற்குப் பதிலாக, போரின்போது காசாவில் இருந்து கைப்பற்றப்பட்டு குற்றச்சாட்டு இல்லாமல் தடுத்து வைக்கப்பட்ட 1700 பேர் தவிர, தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்ட 250 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கிறது. நேற்று முதல் கட்டமாக 7 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. காசா பகுதியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்தது.
பின்னர் அவர்கள் இஸ்ரேலிய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தெற்கு இஸ்ரேலில் உள்ள ரீம் ராணுவ தளத்திற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் குடும்பத்தினருடன் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், மேல் சிகிச்சைக்காக டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக விடுவிக்கப்படும் இஸ்ரேல் பணயக்கைதிகளை அழைத்து வருவதற்காக செஞ்சிலுவை சங்கம் சென்றதை அடுத்து அவர்களிடம் மீதமுள்ள 13 இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்தது. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இறந்த 28 பேரின் உடல்களையும் ஹமாஸ் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் சரியான நேரம் தெரியவில்லை. டெல் அவிவ் சதுக்கத்தில் திரண்டு இருந்த பணயக்கைதிகளின் குடும்பத்தினரும், நண்பர்களும், செஞ்சிலுவை சங்கத்தினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதாக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர்.
இதேபோல் பாலஸ்தீன கைதிகளை ஏற்றிக்கொண்டு செஞ்சிலுவை சங்கத்தின் இரண்டு பேருந்துகள் ஓபர் சிறையில் இருந்து வெளியேறின. போர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சுமார் 1900 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களை ஏற்றிச்சென்ற பேருந்துகள் காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட 154 பாலஸ்தீன கைதிகள் எகிப்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எகிப்து நாட்டை சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட 1900க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களில் இந்த கைதிகளும்
அடங்குவர்.
* டிரம்ப் முயற்சிக்கு ஆதரவு: பிரதமர் மோடி அறிவிப்பு
இஸ்ரேல், ஹமாஸ் போரை நிறுத்த டிரம்ப் எடுத்து வரும் முயற்சிக்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்தார். இதுதொடர்பாக எக்ஸ் பதிவில்,’ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்ட பின்னர் அனைத்து பணயக்கைதிகளின் விடுதலையையும் நாங்கள் வரவேற்கிறோம். அவர்களின் விடுதலை அவர்களின் குடும்பங்களின் தைரியத்திற்கும்,அமெரிக்க அதிபர் டிரம்பின் அசைக்க முடியாத அமைதி முயற்சிகளுக்கும், பிரதமர் நெதன்யாகுவின் வலுவான உறுதிக்கும் ஒரு அஞ்சலியாக நிற்கிறது. அந்த பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த டிரம்பின் நேர்மையான முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்’ என்று மோடி தெரிவித்துள்ளார்.
* அதிபர் டிரம்ப் இஸ்ரேல், எகிப்து பயணம்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்பட்டுச்சென்றார். அவரை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் ராணுவ இசைக்குழு இசைத்தப்படி வரவேற்றனர். இதனிடையே ஹமாஸால் விடுவிக்கப்பட்ட முதல் பணயக்கைதிகளின் வாகனங்கள் இஸ்ரேலுக்குள் சென்றன. அதிபர் டிரம்ப் பணயக்கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளார். பின்னர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் பேசினார். அவருக்கு எம்பிக்கள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து எகிப்து செல்லும் அதிபர் டிரம்ப், ஷார்ம் எல்-ஷேக் நகரில் நடைபெறும் அமைதி மாநாட்டில் பங்கேற்கிறார்.
* உக்ரைன் போரை நிறுத்தாவிட்டால் டோமாஹாக் ஏவுகணை
ரஷ்யா உக்ரைன் உடனாக போரை விரைவில் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் சென்றபோது ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் கூறுகையில், \” உக்ரைன் உடனான போர் தீர்க்கப்படவில்லை என்றால் நான் உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்பப்போகிறேன். டோமாஹாக் நம்பமுடியாத அளவுக்கு மிகச்சிறந்த ஆயுத அமைப்பாகும். மிகவும் அதிகமாக தாக்கும் திறன் கொண்டது. நேர்மையாக சொன்னால் ரஷ்யாவிற்கு அது தேவையில்லை\” என்றார்.
* டிரம்புக்கு விருது
இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகள் அதிபர் டிரம்ப் தங்களது நாடுகளின் மிக உயர்ந்த விருதை பெறுவார்என்று அறிவித்துள்ளன.