காஸா: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெறும் போர் இரண்டாவது ஆண்டை எட்டியிருக்கும் நிலையில், காஸாவில் இருக்கும் மருத்துவமனையை குறிவைத்து தாக்குதலை நடத்தி இருக்கிறது இஸ்ரேல். இதில் செய்தியாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - காஸா இடையே கடந்த 2023ஆம் ஆண்டு ஆக்டொபரில் போர் துவங்கியது. இந்த போரால் காஸாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.
கிட்டதிட்ட காஸா முனையே தரமட்டமான நிலையில், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பலரும் உயிரிழக்கும் சோகம் தொடர்கிறது. பெண்கள், சிறார்கள் உட்பட ஒருவேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் துயரம் நிலையில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் கதையாக மீண்டும் தாக்குதல் கொடுத்துள்ளது இஸ்ரேல். ஆம் காஸாவில் உள்ள நாசர் என்னும் மருத்துவமனையில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சையில் இருந்த நிலையில், அங்கு நடத்திய வலுவான தாக்குதலில் நோயாளிகள் உட்பட 20 பேர் பலியாகினர்.
குறிப்பாக தாக்குதலில் ஐந்து செய்தியாளர்களும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. யுத்தம் மண்ணான காஸாவில் உயிரை பணயம் வைத்து செய்தி சேகரித்து செல்லும் செய்தியாளர்கள், தாக்குதலில் கொல்லப்படுவது அங்கு தொடர் கதையாகி இருக்கிறது. ஆம் தரவுகளின்படி இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை 200க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து, அறிக்கை வெளியிட்டு இருக்கும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம்
இது ஒரு துயரமான விபத்து என்றும், பத்திரிகையாளர் மீது எப்போதும் மதிப்பு உண்டு என்றும் குறிப்பிட்டுயிருக்கிறது. அதே நேரம் இஸ்ரேல் பாதுகாப்பு துறை தரப்பில், இந்த சம்பவத்துக்கு வருந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர், செய்தியாளர்களை தாண்டி இரண்டு ஆண்டு கால கட்டத்தில் காஸாவில் - இஸ்ரேல்லி நிகழ்த்தப்பட மனித உரிமை மீறல்களை சர்வதேச நாடுகள் தலையிட்டு தடுக்கவேண்டும் என்கின்ற குரல் வலுத்து வருகிறது.