Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காஸா இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பது நற்செய்தி: வைரமுத்து பதிவு

சென்னை: காஸா இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பது நற்செய்தி என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 67,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓராண்டில் காஸாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டு உணவுக்காகக் காத்திருந்தவர்களின் உயிர் பறிக்கப்பட்டு வருகிறது.

காஸா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில், பாலஸ்தீன மக்களுக்கு தமிழகம் முழு ஆதரவு அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காஸா இனப் படுகொலையைக் கண்டித்து 'சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும்' என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 08.10.2025 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் காஸா மக்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து வருகின்ற அக்டோபர். 14 ஆம் தேதி கூடவுள்ள தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இதனை வரவேற்கும் விதமாக கவிஞர் வைரமுத்து எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிவிட்டுள்ளார். அதில்,

காசாவில் நிகழும்

இனப்படுகொலைகளுக்கு எதிராகத்

தமிழ்நாடு சட்டமன்றத்தில்

தீர்மானம் நிறைவேற்றப்படும்

என்பது ஒரு நற்செய்தியாகும்;

நம்பிக்கை தருவதாகும்

காசாவின்

உலர்ந்த வானத்தில் பெய்யும்

தமிழ்நாட்டு மழையாகும்

முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின்

மனிதாபிமானத்தை

மனம் உள்ளவர்களெல்லாம்

பாராட்டுவார்கள்

காசா ஒரு சிறு பகுதிதான்

41 கி.மீ நீளமும்

10 கி. மீ அகலமும் கொண்ட

ஓர் ஒட்டு நிலம்தான்

ஆனால்,

தண்ணீர் இல்லாத

அந்தப் பாலை நிலத்தில்

ரத்த ஊற்று பீறிடுகிறது

உலகத்தின் கண்களில் விழுந்த

கந்தகத் தூளாக

அது உறுத்திக்கொண்டே இருக்கிறது

முதலில் அந்த மக்கள்

உயிரோடு இருக்க வேண்டும்

இந்தத் தீர்மானம்

சர்வதேசச் சமூகத்தின் மீது

தமிழ்நாடு சட்டமன்றம் காட்டும்

அன்பென்றும் அக்கறையென்றும்

போற்றப்படும்

தீப்பிடித்த வீட்டில்

ஆளுக்கொரு குடம் தண்ணீர்

அள்ளி இறைப்பதுபோல

அனைத்துக் கட்சிகளும்

இந்தத் தீர்மானத்தை

ஆதரிக்கும் என்று நம்புகிறோம்

இது

உலக சமாதானத்துக்கு

எங்கள் பங்கு

மத்திய கிழக்கை நோக்கி

எங்கள் வெள்ளைப் புறா இவ்வாறு தெரிவித்துள்ளார்.