காசா உணவு விநியோக மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிசூட்டில் 31 பேர் பரிதாப பலி: 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
காசா:காசாவில் உணவு விநியோகம் நடைபெறும் இடத்திற்கு அருகே இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, காசாவின் மீது இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் காசாவில் அமெரிக்கா நிதியுதவியுடன் இயங்கி வரும் உணவு விநியோக மையத்திற்கு அருகே ஒரு கிமீ சுற்றளவில் உள்ள பகுதியில் இஸ்ரேல் படையினர் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்று செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது.
காசாவில் எந்த விதமான அசம்பாவிதங்களும் இன்றி உணவு விநியோகம் நடந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. காசா சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஸாகேர் அல் வாஹிதி துப்பாக்கிசூடு சம்பவத்தை உறுதிப்படுத்தியதோடு கொல்லப்பட்டவர்களில் 2 பேர் பெண்கள் என்று கூறினார்.