காசாவில் குழந்தைகள் எதிர்கொள்ளும் துயரம்.. 21,000 குழந்தைகள் இயல்பான திறனை இழந்துள்ளன: ஐ.நா. வேதனை!!
காசா: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பல இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாய் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.நா. அமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது. போரின் காரணமாக 40,500 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சரிபாதி குழந்தைகள் கேட்கும், பேசும், பார்க்கும் திறன் உள்ளிட்ட திறன்களை இழந்துள்ளதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஊட்டச்சத்து காரணமாக காசா குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேநிலை நீடித்தால் 2026 ஜூன் மாதவாக்கில், சுமார் 1,32,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும், ஒருங்கிணைத்த உணவு பாதுகாப்பு குறித்து கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. காசா மீதான தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 63,700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,61,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பிராந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2023ம் ஆண்டின் காசாவின் முக்கிய சாலையின் படத்துடன் தற்போதைய பேரழிவுக்குள்ளான அதே சாலையின் விடியோவை பத்திரிகையாளர் மோதாஜ் அஜாய்ஜியா வெளியிட்டு இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. காசாவை சேர்ந்த மோதாஜ் அஜாய்ஜியா முக்கியமான புகைப்பட பத்திரிகையாளர்களில் ஒருவர் ஆவார். இவர் காசாவின் முக்கியமான சாலையில் இருபுறமும் உயர்ந்த கட்டடங்களுடன் கூடிய வீடியோவை கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி எடுத்துள்ளார். அதே சாலை இஸ்ரேல் தாக்குதலில் பேரழிவுக்குள்ளாகி உள்ள வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.