காசா மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்: ஒரு பக்கம் தாக்குதல் மறுபக்கம் பசியால் தவிக்கும் மக்கள்
காசா: இஸ்ரேலில் தொடர் தாக்குதலால் காசாவில் பாலஸ்தீன மக்களின் நிலைமை பரிதாபகரமான நிலைக்கு சென்றுள்ளது. ஒரு வேலை உணவுக்கான சிறுவர்களும், பெண்களும் அலை மோதும் அவலம் தொடர்கிறது. இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் நடத்திவரும் தாக்குதல்கள் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக தொடர்கிறது.இதுவரை 50,000க்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தாக்குதல்கள் விடாமல் தொடர்கிறது இஸ்ரேல்.
உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடும் காசாவில் சில நாட்களுக்கு முன் நிவாரண பொருட்களை வாங்க சென்ற பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய கண்முடி தனமான தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 875ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. இஸ்ரேல் படை தாக்குதலுக்கு அஞ்சி பாலஸ்தீன மக்கள் குடும்பம் குடும்பம்மாக இடம் பெயர்ந்து வருவதால் காசா முழுவதும் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஜபாலியாவில் உள்ள நிவாரண முகாமில் ஒரு குவளை அரிசிக்கஞ்சியை பெற பெண்களும், சிறார்களும், இளைஞர்கள் மணிக்கணக்கில் போராடும் காணொளி காண்போரின் கண்களை குளமாக்குகிறது. போதிய உணவு இல்லாததால் ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக பச்சிளம் குழந்தைகளின் உடல் நலம் மிக மோசமடைந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏராளமான குழந்தைகள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.
இதனிடையே தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் ஏராளமா ராணுவ கவச வாகனங்களை காசா எல்லையில் குவித்து வந்ததால் பதற்றம் பலமடங்கு அதிகரித்துள்ளது.ஒரு பக்கம் அமைதி பேச்சுகளுக்கு தயார் என கூறிவரும் இஸ்ரேல், மறுபக்கம் காசா மீது தாக்குதலை அதிகரித்து வருவதால் பாலஸ்தீன மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால் காசா வில் ஒரு சமூகமே உணவின்றி அழிவை நோக்கி செல்வதை தடுக்க வழிதெரியாமல் தவிக்கின்றனர் சர்வதேச பொதுநல அமைப்புகள்.