Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூட்டம் கூட்ட, கலையாமல் இருக்க இலை நிர்வாகிகள் செய்யும் வேலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காவல் நிலையத்தை கண்டு குற்றவாளிகள்தான் பயந்து ஓடுவாங்க.. ஆனா, இன்ஸ்பெக்டர்களும் தலைதெறிக்க ஓடுறாங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுமால்சேலம் காவல் நிலையத்துக்கு கடந்த ஆண்டு ெசவன்ஹில்ஸ் என்பவர் இன்ஸ்பெக்டராக வந்து சேர்ந்தார். இவர் ஏற்கனவே சென்னை, கடலூர் காவல் நிலையங்களில் பணிபுரிந்தபோது சிக்கலில் சிக்கி இடமாற்றம் செய்யப்பட்டுதான் இங்கு வந்தாராம்.. இவர் இங்கு வந்ததில் இருந்தே யாரிடமும் சரிவர பேசாமல் பணிபுரிந்தாராம்.. இவர் காவல் நிலையத்தில் பெரும்பாலும் வழக்குகளை விசாரிப்பது இல்லையாம்.. ஏதேனும் சிக்கல் வந்தால் பதவி உயர்வுக்கு வேட்டு வந்துவிடும் என்று பயந்து பயந்து சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் வேலை செய்து வந்தாராம்.. இந்நிலையில் ெசவன்ஹில்ஸ் இன்ஸ்பெக்டரானவர், அண்ணன், தங்கை பிரச்னை சம்பந்தமாக மேலதிகாரி விசாரிக்க சொல்லியும் பாரபட்சமாக நடந்து கொண்டதாக சொல்றாங்க.. இதனால் பாதிக்கப்பட்டவர் மீண்டும் மேலதிகாரியிடம் சொல்ல, அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்துள்ளார்களாம்.. ஏற்கனவே சுமால்சேலத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் பணிக்காலத்தில் இடமாற்றம், சஸ்பெண்ட் என்ற நிலையில், அதை நினைத்து பயந்து பயந்து வேலை செய்த செவன்ஹில்ஸ் இன்ஸ்சும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுட்டாராம்.. இதனால் சுமால்சேலம் காவல் நிலையத்தை காவு வாங்கும் காவல் நிலையம் என நினைத்து பெரும்பாலான இன்ஸ்கள் இங்கு வரவே தயங்குகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சேலத்துக்காரர் சுற்றுப்பயணத்தில் கூட்டத்தை காட்ட புதுடெக்னிக்கை பயன்படுத்தி ‘விட்டமின் ப’ கொடுத்தாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ டெல்டா மாவட்டத்தை தொடர்ந்து மலைக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சேலத்துக்காரர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் போது கூட்டம் அதிகம் இருக்க வேண்டும். சேலத்துக்காரர் ஸ்பாட்டுக்கு வந்தவுடன் கூட்டம் கலைந்து செல்லக்கூடாது என தலைமையிடத்தில் இருந்து கட்சியில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களுக்கு ரகசிய உத்தரவு பிறக்கப்பட்டு இருந்ததாம்.. இதற்காக டெல்டா மாவட்டம் முழுவதிலும் இருந்து அழைத்து வரக்கூடிய கூட்டம் கடைசி வரைக்கும் கலைந்து செல்லாமல் இருக்க பல்வேறு உத்திகளை பொறுப்பாளர்கள் கையாண்டு இருக்காங்க.. சில வாகனங்களில் இருக்கையை பொறுத்து ‘விட்டமின் ப ’ வும், சில வாகனங்களில் இருக்கையை விட கூடுதலாக இருந்தால் அதற்கும் கூடுதலாக ‘விட்டமின் ப’ வழங்கப்பட்டுள்ளதாம்.. முக்கியமாக பிரசாரம் முடிந்த பிறகு ஒவ்வொருவராக அழைத்து அவர்களுக்கும் தனித்தனியாக ‘விட்டமின் ப’ கொடுத்திருக்காங்க.. இலை கட்சியில் பழைய டெக்னிக்காக இருந்தாலும், இந்த ஐடியா இந்த தடவை கை கொடுத்தது என பொறுப்பாளர்களுக்குள் பேசி அவர்களுக்குள் மனசை தேத்திக்கிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உள்ளூர்வாசிகளுக்கே தேர்தலில் சீட் என்ற புதுநெருக்கடிகளால் கட்சி தலைமை அதிர்ச்சியில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பிரெஞ்சு கலாச்சாரம் கலந்த யூனியனான புதுச்சேரியில் வெளிமாநிலத்தவர் அரசியல் களத்தில் இறங்குவது சமீபகாலமாக அதிகரித்தபடி உள்ளதாம்.. இதனால் உஷாரான உள்ளூர் பிரபலங்கள், தங்களது கட்சித் தலைமைக்கு இப்போதே புதுவித நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார்களாம்.. அதாவது செலவு செய்வதற்கு வசதிபடைத்த பிரபலங்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து ஐக்கியமானாலும் சரி, நமக்காக செலவிட முன்வந்தாலும் சரி, உள்ளூர் தரப்புக்கே சீட் உரிமையில் முன்னுரிமை தரப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து இருக்கிறதாம்.. சில கட்சிகளில் தீர்மானங்களே போடப்படுகிறதாம்.. மற்ற கட்சிகளும் இதை பின்பற்ற வேண்டுமென கோரிக்கையும் கசிய விடப்பட்டுள்ளதாம்.. நிலைமை இப்படியிருக்க யூனியனை மட்டுமின்றி தமிழகத்தையும் கலக்கி வரும் லாட்டரி அதிபரிடம் சரணடைய புதுமுகங்கள் மட்டுமின்றி சில மாஜிக்களும் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.. குறிப்பாக சிறுபான்மையின ஓட்டு வங்கி அதிகமுள்ள தொகுதிகள் குறிவைக்கப்பட்டு உள்ளதாம்.. இதனால் தேர்தல் நெருங்கியதும் அடுத்தடுத்த தாவல் குறித்த அதிர்ச்சிகள் அந்தந்த கட்சித் தலைமைக்கு தெரிய வருமாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘திண்ணை பிரசாரம் செய்ய போன இலைக்கட்சி நிர்வாகிகளிடம் கேள்வி மேல் கேள்வியை கேட்டு ஜனங்க துளைத்து எடுத்துட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் மறுபடியும் ஜெயிக்கணும் என இலைக்கட்சி கங்கணம் கட்டி வேலை செய்யுதாம்.. கட்சி மேலிடம் திண்ணை பிரசாரம் செய்யுங்க என உத்தரவு போட்டுச்சாம்.. சில இடங்களில் இந்த பிரசாரம் நடந்துச்சாம்.. ஆனா மக்கள் கிட்ட போதுமான ஆதரவு கிடைக்கலையாம்.. 10 எம்எல்ஏ இருந்தும், எங்களுக்காக பேசி எந்த திட்டத்தையும் நிறைவேற்றி தரலை.. ஒன்றிய அரசின் திட்டம் ஒன்று கூட கொண்டு வர இலைக்கட்சி உதவி செய்யலை.. தேர்தல் வர்றதால ஆதாயத்துக்காக தேடி வர்றீங்க என நிர்வாகிகள் கிட்ட ஜனங்க கேள்வி மேல கேள்வியை கேட்டு துளைத்து எடுத்துட்டாங்களாம்.. இதனால திண்ணை பிரசாரம் செய்ய போன இலைக்கட்சி நிர்வாகிங்க பின்வாங்கிட்டாங்களாம்.. இனி பேசுனா வேலை நடக்காது.. வேற ரூட்ல தான் போகணும் என முடிவு செஞ்சிருக்காங்களாம்.. பூத் வாரியாக வாக்காளர் லிஸ்ட் எடுத்து செல்போன் நெம்பர் வாங்கி வெச்சிருக்காங்களாம்.. எலக்‌ஷன் வர்றதுக்குள்ள ஏகப்பட்ட ‘கிப்ட்’ தந்து ஜனங்கள கவர் பண்ணலாம் என திட்டம் இருக்குதாம்.. தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ், காலண்டர், டிபன் பாக்ஸ், சுவர் கடிகாரம் என எதை தரலாம் என ேயாசிக்கிறாங்களாம்.. வீட்டுக்கு வீடு கிப்ட் தரலாம் என திட்டம் போட்டிருக்காங்களாம்.. மாவட்டத்தில் சீனியர்கள் சிலரை ஓரங்கட்டி விட்டு இளைஞர்களை களம் இறக்கவும் முடிவு எடுத்திருக்கிறதாகவும் தகவல் வெளியாகி இருக்கு.. இதுல மாஜி அமைச்சரின் உறவினருக்கு புறநகர் ஏரியாவுல ஒரு சீட்டு கன்பார்ம் பண்ணிட்டாங்களாம்.. இவர் தான் பட்டுவாடா பார்க்க போறதா சொல்றாங்க.. சிட்டியிலும் புதுசா ஆள் இறக்க போறாங்களாம்.. இவுங்க தான் ‘வோட்டர் லிஸ்ட்’ பட்டுவாடா கவனிக்க போறாங்களாம்.. தீபாவளியை ஒட்டி கவனிப்பு ஆரம்பிக்குமாம்.. வெறும் கையோட பேசாதீங்க. காந்தி நோட்டோட களத்துல இறங்குனா தான் காரியமாகும்னு மேலிடம் கறாரா சொல்லி ஆர்டர் போட்டிருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.