‘‘எம்பி தேர்தல் கொடுத்த அனுபவத்தால் ஏகப்பட்ட வேலையை செய்கிறாராமே சிவாயமானவர்..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘விநோத அரசியல் விளையாட்டுகள் அரங்ேகறும் புதுச்சேரியில் புதுமைகளுக்கு பஞ்சமில்லையாம்.. கடந்த ஆட்சி இறுதியில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின் கட்சி மாறிய பிரபலங்களில் சிலர் தொகுதியை விட்டே ஓட்டம் பிடித்தார்களாம்.. அந்த வரிசையிலுள்ள சிவாயமானவர், வில்லி பகுதியை கைவிட்டு ஆளுமை தந்த ஆடிப்பட்டு தொகுதிக்கு மாறி வெற்றியும் கண்டாராம்.. வாடகை வீடு எடுத்து தேர்தலை சந்தித்தாலும், சொந்த வீடோ பழைய வில்லியிலே இருந்ததால் அங்கேயே குடியிருந்தாராம்.. தேர்தல் வருவதால் ‘வெளியூர்காரருக்கு எதற்கு ஓட்டு’ என்ற பரப்புரையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்ததாம்.. உஷாரான சிவாயமானவர், கடந்த மாதமே புதிய வீடு கட்டி குடியேறி விட்டாராம்.. ஆனாலும் விமர்சனங்கள் குறைந்தபாடில்லையாம்.. வீடுதான் இங்கே... ஓட்டு எங்கே... என்ற கேள்வியை ஆதாரத்துடன் ெதாகுதியில் சிலர் கிளப்பி விட்டுள்ளார்களாம்.. ஏற்கனவே எம்பி தேர்தல் கொடுத்த அனுபவத்தால் அடையாள அட்டையையும் அவசரம் அவசரமாக தற்ேபாது மாற்றி இருக்கிறாராம் சிவாயமானவர்.. எது எப்படி இருந்தாலும் ஜக்குடன் கூட்டணி விவகாரத்தால் உள்ளடி வேலைகள் இருக்கத்தான் செய்யும் என்ற பேச்சு தொகுதியில் உலாவுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எத்தனை முறை ரெய்டு நடத்துனாலும் பணம் சிக்கவில்லை என்று விஜிலென்ஸ் வெறும் கையை வீசிக்கிட்டு வந்ததே இல்லையாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழக- ஆந்திர எல்லையோரம் வெயிலூர் மாவட்டம் இருக்குறதால, ஆர்டிஓ செக்போஸ்ட்கள் போட்டிருக்காங்க.. குறிப்பா காட்டுப்பாடி கிறிஸ்டியான்பேட்டை செக்போஸ்ட் வழியாகத்தான் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து போகுது.. வெளி மாநிலங்கள்ல இருந்து வர்ற வாகனங்கள், இங்கிருந்து செல்ற வாகனங்கள்னு இருமாநில பர்மிட் போட்டு ெசல்லணும்.. இந்த பர்மிட் போட ஒவ்வொரு வாகனத்திற்கும் அரசு கட்டணத்ைத விட வசூல் அதிகமாக நடக்குதாம்.. ஒருநாளைக்கு ஒரு எல் வரை சம்திங் கொட்டுதாம்.. சில ஆண்டுகளாகவே தொடர்ந்து விஜிலென்ஸ் போலீசார் ரெய்டு நடத்தி பணம் பறிமுதல் செய்றாங்க.. ஆனாலும் வசூல் வேட்டை தொடருதாம்.. இப்போ கூட விஜிலென்ஸ் நடத்துன ரெய்டுல, ஒரே இரவில் 95 ஆயிரம் சிக்கிருச்சு.. அதோட வாகனங்கள்ல எடுத்து வர்ற பூக்கள், காய்கறிகள், பழங்களையும் தினமும் கூடை கணக்கில் அள்ளிக்கிறாங்களாம்.. வசூலுக்கென்றே தனி நோட் புக் போட்டு வெச்சிருக்குறாங்களாம்.. எந்த அதிகாரி, யார் வந்தால் நமக்கு என்ன என்ற ரீதியில குவிக்குறாங்களாம்.. தற்போது ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள்ல இருந்து தினந்தோறும் கிரிவலம் மாவட்டத்துக்கு அதிகம் பேர் வர்றதால வசூலும் பல மடங்கு அதிகரிச்சிடுச்சாம்.. இந்த செக்போஸ்ட்ல பணியாற்ற நீயா, நானான்னு போட்டா, போட்டி நடக்குதாம்.. எப்போ ரெய்டு போனாலும் பணம் சிக்கவில்லை என்று விஜிலென்ஸ் வெறும் கையுடன் வந்ததே இல்லைன்னு சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூட்டத்தை காட்டி சேலத்துக்காரரை ஐஸ் வைக்க கணக்கு போட்டுள்ளாங்களாமே இலைக்கட்சி நிர்வாகிகள் எப்படி?..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெல்டா மாவட்டம் முழுவதும் சேலத்துக்காரர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வர்றார்.. தொடர்ந்து, செல்லும் இடம் எல்லாம் அதிகளவில் கூட்டத்தை காண்பிக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகளுக்கு தலைமையிடத்தில் இருந்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததாம்.. இதையடுத்து நிர்வாகிகள், ‘விட்டமின் ப’ கொடுத்து, கூட்டத்தை கூட்டி வர்றாங்களாம்.. கட்சியினரை அழைத்து வருவதற்காக, ‘சி’ அளவில் கூட ஒதுக்கப்பட்டுள்ளதாம்.. சேலத்துக்காரர் வருகையின் போது, கூட்டத்தை அதிகளவு காண்பித்து விட்டால், இதன் மூலம் அவரை எளிதாக ஐஸ் வைத்து விடலாம் என டெல்டா மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கணக்கு போட்டுள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரெண்டு அதிகாரிகளுக்குள் ஏழாம் பொருத்தத்தால் நகராட்சி பணிகள் எல்லாம் முடங்கிக் கிடக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டம் வாசி நகர் ஆட்சி இன்ஜினியரான, 2 எழுத்து பெயர் கொண்ட நபருக்கும், இதே பிரிவுல பணிபுரியுற சூப்ரவைசருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்துச்சாம்.. இதனால கடந்த 3 மாதங்களாக மலைய பெயர்ல வெச்சிருக்குற அந்த சூப்ரவைசரு தொடர் விடுப்புல இருந்து வர்றாராம்.. ஒவ்வொரு மாசமும் விடுமுறைய நீட்டிச்சுகிட்டு 3 மாதங்களாக வேலைக்கு வராமல் உள்ளதால, இன்ஜினியரிங் பிரிவுல பணிகள் தேங்கிப்போய் கிடக்குதாம்.. இதனால வேறு ஒருவரை நியமிக்கணும்னு கோரிக்கை விடுத்து வந்த நிலையில, விசாரணை வெச்சிருக்காங்க.. அதுல இன்ஜினியர் தான், மலைய பெயர்ல வெச்சிருக்குற சூப்ரவைசரை வேலை செய்ய விடாம செஞ்சது தெரியவந்திருக்குது.. உடனே இதுக்கெல்லாம் காரணமான ரெண்டு எழுத்துக்காரரை வேற ஒரு நகர் ஆட்சிக்கு பணி இடமாற்றம் செஞ்சிட்டாங்க.. இப்படி இன்ஜினியரும் இல்லை, சூப்ரவைசரும் இல்லாததால வளர்ச்சி திட்ட பணிகளை செய்ய முடியாமலும், திட்டப் பணிகளை தயார் செய்ய முடியாமலும் முடங்கிப்போய் இருக்குதாம் வாசி நகர் ஆட்சி.. இதனால, நிர்வாகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை குரல் ஒலிக்க தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.