நாமக்கல்: நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 3 ஆயில் நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் அறிவித்த டெண்டரில் பங்கேற்ற 3500 லாரிகளில் 700 வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. புதிய டெண்டரில் பங்கேற்றுள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஒர்க் ஆர்டர் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக, கடந்த 3 நாட்களாக தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 5 ஆயிரம் காஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை. சமையல் எரிவாயு லோடு ஏற்றும் துறைமுகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் லாரிகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, மங்களூரு துறைமுகங்களில் கப்பல்களில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு லோடு ஏற்றப்படாமல் நடுக்கடலில் கப்பல் நிற்கிறது.
இதனால் ஆயில் நிறுவனங்களுக்கு துறைமுக அதிகாரிகள் தினமும் ரூ.60 லட்சம் அபராதம் விதித்து வருகின்றனர். கொச்சி, மங்களூரு,பாலக்காடு, தூத்துக்குடி, சென்னை, அனந்தபூர், விசாகபட்டிணம் ஆகிய இடங்களில் உள்ள எண்ணைசுத்திரிப்பு நிலையங்களில் இருந்து கடந்த 4 நாட்களாக சமையல் எரிவாயுலோடு லாரிகளில் ஏற்றப்படவில்லை. இதனால் சுமார் பல ஆயிரம் டன் சமையல் எரிவாயு கப்பல்களில் தேக்கம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர 3 ஆயில் நிறுவனங்களின் செயல்இயக்குனர்கள் நேற்று காணொலி காட்சி மூலம் தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்கள். சுமார் 3 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இன்று (12ம் தேதி) மீண்டும் காணொலி காட்சி வாயிலாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இது குறித்து, தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது: தற்போது நடைமுறையில் உள்ள டெண்டரை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்யவேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கு அவர்கள் 6 மாதம் மட்டும் நீட்டிப்பு செய்வதாக கூறியுள்ளனர். இன்று 4வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நடக்கிறது. இன்று மீண்டும் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.