Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

குப்பைகளில் தீ, சாலைகளில் தூசிகள் பறப்பதால் காற்றின் தரக்குறியீடு அடிப்படையில் நெல்லைக்கு பின்னடைவு

நெல்லை: குப்பைகளில் பற்றி எரியும் தீ மற்றும் சாலைகளில் அடிக்கடி பறக்கும் தூசிகளால் காற்றின் தரக்குறியீடு அடிப்படையில் நெல்லைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுத்தமான காற்றை சுவாசிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையை உள்ளடக்கிய நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுத்தமான காற்றுக்கு என்றுமே பஞ்சமில்லை.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் உள்ளிட்ட தென்மேற்கு பருவமழை காலங்களில் பொதிகை மலையில் இருந்து தவழ்ந்து வரும் தென்றல், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நோய் தீர்க்கும் அருமருந்தாக காணப்படுகிறது. சென்னை கோவை உள்ளிட்ட பெரு நகரங்களைப் போல நெல்லை தென்காசி மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லை என்றாலும், சுத்தமான காற்று, நிம்மதியான வாழ்க்கை என்கிற காரணிகள் அடிப்படையில் பலரும் சொந்த ஊரை விட்டு வெளியே பிழைப்புக்காக செல்வதில்லை.

நெல்லை தென்காசி மாவட்டங்களில் சமீப காலமாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் சரிவர செயல்படுத்தப்படாததாலும், குவாரிகள் அதிகரிப்பு மற்றும் சாலைகள் சீரமைப்பு சரியாக இல்லாததாலும் காற்றின் தரம் மெல்ல மெல்ல மாசுபட்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் காற்றின் தரத்தை மதிப்பிடுவதற்கு ‘தேசிய காற்றுத் தரக் குறியீடு’ என்ற முறை பயன்படுத்தப்படுகிறது.

காற்றில் கலந்துள்ள 8 வகையான முக்கிய மாசுபடுத்திகளான நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, ஓசோன், அம்மோனியா மற்றும் ஈயம் ஆகியவற்றின் அளவை அடிப்படையாகக் கொண்டு இந்த குறியீடு கணக்கிடப்படுகிறது. இந்தக் குறியீடு 6 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு குறிப்பிட்ட வண்ணம் ஒதுக்கப்பட்டு, அதன் மூலம் காற்றின் தரத்தை மக்கள் எளிதில் அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காற்றுக்கான தரக்குறியீடுகள் அடிப்படையில் நெல்லையில் தூய்மையான காற்று என்ற நிலை தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கடந்தகால அறிக்கைகளின்படி, நெல்லை மாநகரின் காற்றின் தரம் நல்லது என்ற நிலையில் உள்ளது. சமீபத்திய நிலவரப்படி, நெல்லையில் ஏ.க்யூ (ஏர் குவாலிட்டி) எனப்படும் காற்றுத் தரக் குறியீடு எண் 46 ஆக பதிவாகியிருந்தது. இந்த அளவு பெரும்பாலான மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இருப்பினும், காற்று மாசுபாட்டிற்கு அதிக உணர்திறன் கொண்ட நபர்கள் மிக நீண்ட நேரம் வெளியில் இருப்பதை தவிர்ப்பது நல்லது. கடந்த காலங்களில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கைகளின்படி, இந்தியாவின் தூய்மையான காற்றுள்ள நகரங்களின் பட்டியலில் நெல்லை பலமுறை முன்னிலை வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராமையன்பட்டி தீ விபத்திற்கு முன்பு வரை நெல்லையில் காற்றின் தர குறியீடு எண் 46 ஆக பதிவான நிலையில், தற்போது புகை மண்டலத்தினால் 60 ஆக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்லை மாநகராட்சி குப்பை கிடங்கான ராமையன்பட்டியில் தொடர்ந்து தீ விபத்துக்கள் ஏற்பட்ட போதிலும் இதுவரை குப்பை கிடங்கு பகுதியில் தீ தடுப்பான் அமைப்புகள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தென்மாவட்டங்களில் அதிலும் நெல்லை, குமரி, தென்காசியில் எப்போதுமே தூய்மையான காற்றை நாம் சுவாசிக்க முடியும். சமீபகாலமாக கேரளாவின் குப்பைகளை கொட்டி எரிப்பதாலும், குப்பைகள் பராமரிப்பில் திட்டமிடல் இல்லாததாலும் அடிக்கடி காற்று மாசுப்பட்டு வருகிறது.

மேலும் பாதாள சாக்கடை பணிகளுக்காக நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு, தூசிகள் சாலைகளில் பறக்கின்றன. இதனால் காற்று மாசுப்பட்டு வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். நெல்லையில் தூய்மையான காற்றுக்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

* காற்றுத் தரக் குறியீட்டின் வகைகள்

காற்று தரக்குறியீடுகள் (ஏ.க்யூ) இந்தியாவை பொறுத்தவரை 0 தொடங்கி 400 வரை எண்களில் கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா, மெரூன் என வண்ணக்குறியீடுகளில் குறிப்பிடப்படுகின்றன. எண்கள் அடிப்படையில் 0 - 50 வரை நல்லது மட்டுமின்றி, காற்றை சுவாசிப்பவர்களுக்கு மிகக் குறைவான பாதிப்புகள் வேண்டுமானால் ஏற்படும். 51 - 100 எண்களால் குறிப்பிடப்பிடப்பட்டால், உணர்திறன் மிக்கவர்களுக்கு இலேசான சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

101 - 200 எண்கள் காற்றின் குறியீடுகளாக இருந்தால் நுரையீரல், ஆஸ்துமா மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். 201 - 300 எண்களில் காற்றின் குறியீடுகள் இருந்தால் மோசம் மற்றும் நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்படலாம். 301 - 400 காற்று குறியீடு செய்யப்பட்டால் மிகவும் மோசம் என்றும் வெளியில் இருந்தால் சுவாச நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.