Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குப்பை ஊழலில் முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால் திகார் ஜெயிலில் இருப்பார் ரங்கசாமி

*நாராயணசாமி பரபரப்பு பேச்சு

புதுச்சேரி : முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால் ரங்கசாமியை அடுத்த நிமிடம் திகார் சிறைக்கு அனுப்பி விடுவர் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார்.

புதுச்சேரி கால்நடை நலத்துறையில் கறவை மாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு திட்டத்தில் நடைபெற்ற ஊழலை கண்டித்து காங்கிரஸ் விவசாய அணி சார்பில் நேற்று சுதேசி மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், முன்னாள் துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்து பேசியதாவது: கால்நடை நலத்துறையில் மாட்டு தீவனம் மற்றும் மாடு வாங்கும் திட்டத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் 2 முறை துணைநிலை ஆளுநரை சந்தித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆட்சியில் வெளிப்படை தன்மை இல்லை.

அனைத்தும் சிங்கிள் டெண்டர் முறையில் கொடுக்கிறார்கள். இதற்கு காரணம், அந்தந்த துறை அமைச்சர்களுக்கு கமிஷன் சரியாக செல்கிறது. ஊழலை பற்றி கூறினால், கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் கவலைப்படுவதில்லை.

பாண்லேவில் ரங்கசாமிக்கு வேண்டிய 10வது படித்தவரை துணை ஜெனரல் மேலாளராக நியமித்து ரூ.1.5 லட்சம் ஊதியம் கொடுத்தால், அந்த நிறுவனம் எப்படி முன்னேறும். பாண்லே மேலாண்மை இயக்குநரை கையில் வைத்துக் கொண்டு ரங்கசாமி அதிக ஊழல் செய்கிறார். இந்த ஆட்சியில் சூடு சொரணை இல்லாதவர்கள்தான் பதவியில் இருக்கிறார்கள். முதல்வர் உட்பட எல்லோரிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள்.

மொத்த மதுபான விற்பனை உரிம கட்டணத்தை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாகவும், சில்லறை மதுபான விற்பனை உரிம கட்டணத்தை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி இருக்கிறார்கள்.

இதனால் மதுபான விற்பனையாளர்கள் முதல்வரை பார்த்து பேரம் பேசியுள்ளனர். அப்போது, ரூ.5 கோடி தருவதாக கூறியதற்கு, அது முடியாது என கூறி அனுப்பி விட்டார். ஆனால், முதல்வரிடம் உள்ள 6 புரோக்கரில் ஒரு புரோக்கர் ரூ.25 கோடி கொடுத்தால் உரிம கட்டணத்தை முதல்வர் குறைத்து கொடுப்பார் என கூறி இருக்கிறார். இதை கேட்டு அவர்கள் அங்கிருந்து ஓடி வந்துள்ளார்கள்.

குப்பை ஊழலில் அக்கா அடைமொழி கொண்டவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார். 2026ல் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், முதலில் முதல்வரும், 5 அமைச்சர்களும், புரோக்கர்கள் மற்றும் உடந்தையாக உள்ள அதிகாரிகளும் சிறைக்கு செல்வார்கள். நவ.1ம் தேதி முதல்வர் ரங்கசாமி கொடி ஏற்றிவிட்டு பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் பரவி வருகிறது. அவர் பதவியை ராஜினாமா செய்தால், அடுத்த நிமிடம் திகார் சிறைக்கு அனுப்பி விடுவர்.

இதற்கு முதல்வர் ரங்கசாமி ரெடியாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்யலாம். ஆனால், அவர் முதுகெலும்பு இல்லாதவர். கிரண்பேடியிடம் நாராயணசாமி அட்ஜெஸ்ட் செய்து சென்றிருந்தால், புதுச்சேரியில் திட்டங்கள் நன்றாக நடந்து இருக்கும் என ரங்கசாமி கூறினார்.

இப்போது கவர்னருடன் அட்ஜெஸ்ட் செய்து செல்லும் ரங்கசாமியால் என்ன செய்ய முடிந்தது. ராஜினாமா செய்ய போகிறேன் என்று ஜீபூம்பா காட்டுகிறார். அதற்கு கவர்னர், முதலில் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள் என கூறுகிறார். இந்த என்ஆர் காங்., - பாஜக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில விவசாய அணி தலைவர் முருகன் (எ) ஆறுமுகம், மகிளா காங்., தலைவி நிஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கறவை மாடு திட்டத்தில் நடைபெற்ற ஊழலை கண்டித்தும், இதற்கு அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். அப்போது, கறவை மாடு, ஆடு மற்றும் கோழிகளையும் கொண்டு வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.