கேரள மாநிலத்திலிருந்து வேன்கள் மூலமாக கொண்டுவரப்பட்டு தமிழகப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு
* கழிவுநீர் கலப்பதால் பாதிக்கும் பெரியாறு * நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கூடலூர் : கேரள மாநிலத்திலிருந்து வேன்கள் மூலமாக கழிவுகள் கொண்டு வரப்பட்டு, தமிழக பகுதிகளில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் அண்டை மாநிலமான கேரளாவை ஒட்டி அமைந்துள்ளது.
இதனால், கேரளாவில் இருந்து சில சமூகவிரோதிகள் இறைச்சி, கோழி கழிவுகளையும், மருத்துவ மற்றும் மக்காத குப்பைகளையும் கொட்டிச் செல்கின்றனர். மேலும் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் தேக்கடியில் இருந்தே பல இடங்களில் ஹோட்டல்கள் குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளில் இருந்து கழிவுநீர் பெரியாற்றில் நேரடியாக கலக்கப்படுகிறது.
இதனால் பெரியாறு மாசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சமீப காலமாக சரக்கு வாகனங்கள் மூலமாக கழிவுகளை கொண்டு வந்து தமிழக பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொட்டிவிட்டு செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இதனை அவ்வப்போது வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனாலும், இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே மண்வளம், வனவளம், நீர்வளம் காக்க தமிழக அரசு கழிவுகளை கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை இருப்பதோடு பெரியாற்றை கழிவுநீர் கலப்பிலிருந்து காக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை தேவை
கூடலூர் மக்கள் மன்றம் & தேசிய நுகர்வோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் புதுராசா கூறுகையில், ‘‘கேரளா மருத்துவ மற்றும் குப்பை கழிவுகளை தமிழகத்தில் கொட்டினால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு பின்னரும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து குமுளி வழியாக கூடலூர் நகராட்சி பகுதிகளில் இறைச்சி, மீன் மற்றும் மக்காத கழிவுப்பொருட்கள் பொருட்கள் வாகனங்கள் மூலம் எடுத்து வரப்பட்டு கொட்டப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள சில சமூக விரோதிகளே இச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது வேதனைக்குரியதாக இருக்கிறது.
கேரளாவில் உள்ள ஹோட்டல்கள், வணிக நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் குப்பைகளை அள்ளி தமிழகத்தில் கொட்டும் வேலையை செய்கின்றனர். இவர்கள் இதற்கென வாகனங்களையும், பணியாளர்களையும் ஏற்பாடு செய்து இதை தொழிலாகவே செய்து வருகின்றனர்.
கேரளா எல்லை குமுளியை கடந்து காவல்துறை மற்றும் வனத்துறை சோதனைச் சாவடிகளையும், நகராட்சி துறை கண்காணிப்புகளை ஆகியவற்றைத் தாண்டி தொடர்ந்து எவ்வாறு செய்ய முடியும் என்பதை மாவட்ட நிர்வாகம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே கழிவுகளை கொட்ட வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அதிகமான அபதாரம் விதிக்க வேண்டும். தொடர்ந்து இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் தமிழக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்’’ என்றார்.
மாசடையும் பெரியாறு
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பசுமை செந்தில் கூறுகையில், ‘‘கேரள மாநிலத்திலிருந்து குமுளி வழியாக தமிழகத்தின் கூடலூர் மற்றும் கம்பம் மேற்கு வனப்பகுதிகளில் கொட்டப்படும் கழிவுகளால் வனமும் வன உயிரினங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே குமுளி மலை பாதையில் இருபுறமும் வாகனங்களின் செல்வோரும், கேரளத்தில் இருந்து வரும் சில ஆட்களும் கழிவுகளை கொட்டுவதால் அதை உண்ணும் வனவிலங்குகள் உயிரிழப்பதோடு, சுற்றுச்சூழலும் பாதிப்படைந்து வருகிறது.
மேலும் தேக்கடியிலிருந்து குமுளி வரை உள்ள ஹோட்டல்கள்,சில குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளில் வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக பல இடங்களில் பெரியாற்றில் கலக்கிறது. அதுபோல் தமிழகப் பகுதிகளில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட ஊர்களிலும் கழிவுநீர் நீர்நிலைகளிலும் குறிப்பாக பெரியாற்றிலும் கலக்கிறது.
கழிவுகள் தமிழகத்திலுள்ள வனப்பகுதியிலும், நீர்நிலைகளிலும் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் உள்ள பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் காவல்துறை வனத்துறை மற்றும் உள்ளாட்சித் துறைகளின் மூலம் பெரியாற்றில் கழிவுநீர் கலக்காமலும் , தமிழகப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படாமலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய்கள் கடத்தல்?
கேரளப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களும் நாய் ஒன்றுக்கு சுமார் ரூ.200 ரூபாய் கட்டணம்பெற்றுக் கொண்டு திருட்டுத்தனமாக தமிழகம் வரும் வாகனங்களில் ஏற்றப்பட்டு தமிழகப் பகுதிகளில் விடப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதையும் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் சபரிமலையில் தேங்கும் கழிவுகளையும், மருத்துவக் கழிவுகளையும் தமிழகப் பகுதிகளில் கொட்டிவிட்டுச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.
குப்பை குழிகள் உருவாக்குதல்
மேலும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ‘‘குப்பைகளை கொண்டு வருவது மட்டுமின்றி, வேறு சில சம்பவங்களும் அரங்கேறுகின்றன. கேரளாவை சேர்ந்த சிலர் தமிழகத்தில் நிலங்களை அதிக பணம் கொடுத்து விலைக்கு வாங்குகின்றனர். அந்த நிலங்களில் குழிகளை வெட்டி கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகளை கொட்டி புதைக்கும் சம்பவம் நடந்தேறி வருகிறது.
ரேஷன் அரிசி கடத்தல், போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கைகள் இரு மாநில அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுப்பது போல் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட அதிகாரிகள் இணைந்து குப்பை கொட்டப்படும் சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்றனர்.


