*அகற்ற வலியுறுத்தல்
சேந்தமங்கலம் : கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி நக்கை ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பை கழிவால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சேந்தமங்கலம் வாழவந்திகோம்பை ஊராட்சியில், கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளியில் நக்கை ஆறு உள்ளது.
நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் வழியாக கொல்லிமலைக்குச் செல்லும் பிரதான நெடுஞ்சாலையோரத்தில் இந்த ஆறு உள்ளது. கொல்லிமலையில் தொடர் மழை காலங்களில் அங்கிருந்து வெளியேறும் மழைநீர், நக்கை ஆறு வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று பெரிய ஆற்றில் கலக்கிறது. இதன் மூலம் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பாக்கு விவசாயம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களாக காரவள்ளி பகுதியில் ஓட்டல்கள், டீக்கடைகள், இறைச்சி கடைகள் ஆகியவற்றில் வெளியேறும் கழிவு பொருட்கள் அனைத்தும் ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைப்பதால் புகைமூட்டமாக உள்ளது.கொல்லிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காரவள்ளி வழியாக செல்கின்றனர். நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காரவள்ளியில் வாகனங்களை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு கொல்லிமலைக்கு செல்கின்றனர்.
நக்கை ஆற்றின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் பொழுது கரையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அடிவாரப் பகுதியில் உள்ள கடைகளில் சேரும் குப்பைகள், கழிவு பொருட்கள் அனைத்தும் ஆற்றில் கொட்டப்படுவதால் ஆறு மாசுபடுகிறது.
மேலும், மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு செல்வதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்றனர்.