திருப்பதி: காரில் கடத்திய 70 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சென்னையைச் சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், சூலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டப்ரோலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக காரை ஓட்டி வந்தவர்கள், போலீசாரை பார்த்ததும் வேகமாக செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக காரை மடக்கினர். அதில் நடத்திய சோதனையில், 70 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த இருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் சென்னை அண்ணா சாலையை சேர்ந்த பிபிநாத்(38), புளியந்தோப்பை சேர்ந்த ரோகன்(36) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கார், 70 கிலோ கஞ்சா, 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான இருவர் மீதும் சென்னையில் கஞ்சா கடத்தல், கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.