Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கங்கைகொண்டசோழபுரம் திருவாதிரை விழாவில் மோடி இன்று பங்கேற்பு: ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியிடுகிறார்; திருச்சி, அரியலூரில் ரோடு ஷோ

திருச்சி: தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் சிறப்பு விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்தார். விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் பாஜவினர் வரவேற்றனர். தொடர்ந்து, சாலை மார்க்கமாக பிரதமர் மோடி திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு வந்து தங்கினார். இதைத் தொடர்ந்து, இன்று காலை (27ம் தேதி) ஓட்டலில் இருந்து வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, நீதிமன்றம், பாரதிதாசன் சாலை, தலைமை தபால் நிலையம், குட்ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக விமான நிலையம் வரை சுமார் 8 கிமீ தூரம் பிரதமர் ரோடு ஷோ செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 11 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். ஹெலிபேடில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3 கி.மீ. தூரம் காரில் ரோடு ஷோவாக பிரதமர் மோடி செல்கிறார்.

கங்கைகொண்ட சோழபுரத்தில், பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில், மத்திய கலாசாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, பிரகதீஸ்வரர் ஆலயத்தின் ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்து சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா கடந்த 23ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று நடக்கும் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

முன்னதாக பிரகதீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து ஆடித்திருவாதிரை விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார். அங்கு நடைபெறும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

பின்னர் அங்கிருந்து மதியம் 1.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். பிற்பகல் 2.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* அரியலூருக்கு வரும் முதல் பிரதமர்

அரியலூர் மாவட்டத்துக்கு இதுவரை எந்த பிரதமரும் வரவில்லை. முதல் முறையாக பிரதமர் மோடி வருகிறார். இதனால் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

* எங்களின் பாக்கியம்

பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் தள பதிவில்,‘‘மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டிடக் கலையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், நாளை (ஜூலை 27ம் தேதி) வெகு சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது, எங்களின் பாக்கியமாகும். மேலும், ஆடித் திருவாதிரை விழாவும் கொண்டாடப்படும்’’ என தெரிவித்துள்ளார்.