கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா கோலாகல தொடக்கம்; தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு அருங்காட்சியகம்: 35 அடி உயரத்தில் சிலை: அமைச்சர் அறிவிப்பு
அரியலூர்:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை, அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவாதிரை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி திருவாதிரை நட்சத்திரமான நேற்று கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் ஆடித்திருவாதிரை காலை 9.30 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது.
இந்த விழா ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை அவர் கட்டத்தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்து சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவாக ஒரு வாரம் நடைபெறுகிறது. தொடக்க விழாவை அமைச்சர்கள் சிவசங்கர், தங்கம் தென்னரசு, சாமிநாதன், ராஜேந்திரன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆடிதிருவாதிரை விழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
முன்னதாக மாமன்னன் ராஜேந்திர சோழன் வரலாற்று சிறப்புகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து, பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ‘கலை பண்பாட்டு மற்றும் அருங்காட்சியகங்கள் சார்பில் தஞ்சையில் சோழ அருங்காட்சியகம் என ஏறத்தாழ ரூ.55 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதில் ராஜராஜ சோழனுக்கு 35 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படவுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன். நம்முடைய கலை, பண்பாட்டு கலாச்சாரங்களை பாதுகாக்கின்ற வகையில் இப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை’ என்றார்.
27ம் தேதி மோடி பங்கேற்பு
ஆடிதிருவாதிரை விழாவில் வரும் 27ம்தேதி பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அங்கு சுமார் 3 மணி நேரம் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். தொல்லியல் துறை சார்பில் அங்கு அமைக்கப்படும் புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். அதன் பின்னர் இசை அமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை பிரதமர் கண்டுகளிக்கிறார்.