அகில இந்திய ‘டி’ பிரிவு ஊழியர் சங்க தலைவராக கணேசன் மீண்டும் தேர்வு: முதல் கூட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம்
சென்னை: அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சம்மேளனத்தின் அகில இந்திய தேர்தல் டெல்லியில் உள்ள தமிழ்ச்சங்கம் கூட்ட அரங்கத்தில் நேற்று அகில இந்திய தலைவர் கே.கணேசன் தலைமையில் நடந்தது. சேர்மன் ஸ்ரீதர்ஷன் சிங் கலபானா (பஞ்சாப்), ஸ்ரீராம்ராஜ் துபே (உபி), எஸ்.மதுரம் (தமிழ்நாடு), ஸ்ரீவெங்கடேஸ்வரலு (ஆந்திரா) முன்னிலை வகித்தனர். இந்த தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த கே.கணேசன் 8வது முறையாக அகில இந்திய தலைவராகவும், 2வது தடவையாக எஸ்.மதுரம் அகில இந்திய துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து அகில இந்திய செயற்குழு கூட்டம் தலைவர் கே.கணேசன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 8வது மத்திய ஊதியக்குழுவிற்கு அரசாங்கம் வழங்கிய பரிந்துரைகளின் விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக உள்ளது. ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சலுகைகளை வழங்கும்போது மட்டும் மத்திய அரசு பல காரணங்களை கூறுகிறது. ஆனால், பொது வங்கிகளில் இருந்து பெருநிறுவனங்கள் எடுத்த கடன்களுக்கு நிவாரணம் மற்றும் தள்ளுபடிகளை வழங்கும்போதும், வரி விகிதங்களை குறைக்கும்போதும் ஒன்றிய அரசாங்கம் நிதி நிலைமையை ஒருபோதும் கருதில் கொள்வதில்லை.
பல்வேறு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெறும் அரசு ஊழியர்கள் மரியாதைக்குரிய மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழக்கூடிய குறைந்தபட்ச ஊதியத்தை 8வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைக்க வேண்டும். 1.1.2004 முதல் என்பிஎஸ்-ன் கீழ் உள்ள லட்சக்கணக்கான மத்திய, மாநில அரசு ஊழியர்களின் பங்களிப்பு இல்லாத ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க 8வது ஊதிய குழு பரிந்துரைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களை நிரப்ப வேண்டும். 90 லட்சம் ‘டி’ பிரிவு பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


