புதுடெல்லி: சூதாட்ட செயலி தொடர்பான பணமோசடி வழக்கில் கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சூதாட்ட செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ள போதிலும், திறமை அடிப்படையிலான விளையாட்டுகள் என்ற பெயரில் சில சட்டவிரோத சூதாட்ட செயலிகள் இயங்கி வருகின்றன. இந்த சட்டவிரோத சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அதனடிப்படையில் விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறையினர் சில சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய தேவரகொண்டா, ராணா ரகுபதி உள்ளிட்ட 29 திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது.
இந்நிலையில் சட்டவிரோத சூதாட்ட செயலிகள் விவகாரத்தில் கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வௌியிட்டுள்ள அறிவிப்பில், “கூகுள், மெட்டா நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாக சூதாட்ட செயலிகளை ஊக்கப்படுத்தி பயனர்களை சென்றடைய உதவுகின்றன. எனவே, சூதாட்ட செயலிகளுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 21(நாளை) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கூகுள், மெட்டா நிறுவன பிரதிநிதிகள் ஆஜராக வேண்டும்.
அவர்களிடம் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் வாக்குமூலங்களை பதிவு செய்ய நிர்வாகிகள் கேட்டு கொள்ளப்படுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.