Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரோகித், கோஹ்லி ஆட்டம்.... வீரராக தனிப்பட்ட வீரர்களை பாராட்டலாம்; பயிற்சியாளராக தோல்வியை கொண்டாட முடியாது: கம்பீர் கருத்து; ரசிகர்கள் கொதிப்பு

சிட்னி: சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இழந்தது. அதே சமயம், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஆறுதல் அடைந்தது. ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஓய்வில் இருந்த சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி, இந்த ஒருநாள் தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பினர். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோஹ்லி டக் அவுட் ஆனார். ரோஹித் சர்மாவும் முதல் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது போட்டியில் 73 ரன்கள் குவித்தார். ஆனால், இந்த 2 போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது.

இதனால், தொடரை இழந்த நிலையில், சிட்னியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தனது 50வது சர்வதேச சதம் விளாசி 121 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லி, முதல் 2 போட்டிகளில் ஏமாற்றம் அளித்திருந்தாலும், இந்தப் போட்டியில் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்தார். இவர்களின் 168 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரை இழந்தாலும், கடைசிப் போட்டியில் ரோஹித் மற்றும் கோஹ்லியின் ஆட்டத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் கொண்டாடினர். இந்தச் சூழலில் பிசிசிஐ வெளியிட்ட ஒரு காணொளியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அதில் கம்பீர் பேசுகையில் ‘‘தனிப்பட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டத்தைக் கண்டு நான் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், ஒருநாள் தொடரை நாம் இழந்துவிட்டோம் என்பதுதான் நிதர்சனம். ஒரு பயிற்சியாளராக, ஒரு தொடர் தோல்வியை என்னால் ஒருபோதும் கொண்டாட முடியாது. ஒரு வீரராக, தனிப்பட்ட ஆட்டங்களைப் பாராட்டலாம். ஆனால் ஒரு பயிற்சியாளராக, ஒரு தேசமாக நாம் ஒருபோதும் தொடர் தோல்வியைக் கொண்டாடக் கூடாது என்பது எனது தார்மீகப் பொறுப்பு. ஏனெனில், நாம் நாட்டுக்காக விளையாடுகிறோம்’’ என்றார். கம்பீர் தனது பேச்சில் நேரடியாக யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது பேச்சு ரோஹித் மற்றும் கோஹ்லியின் ஆட்டத்தைக் கொண்டாடிய ரசிகர்களைச் சாடுவது போல இருப்பதாகக் கருதப்படுகிறது. கம்பீரின் இந்தக் கருத்து, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லியின் ரசிகர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

‘‘தொடரை இழந்தது ஒட்டுமொத்த அணியின் தவறு. ஆனால், கடைசிப் போட்டியில் சிறப்பாக ஆடிய வீரர்களைப் பாராட்ட மனம் இல்லாமல், அவர்களை மறைமுகமாகத் தாக்குவது எந்த விதத்தில் நியாயம்?’’ என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர், ‘‘கம்பீரின் கருத்து சரியானதுதான். அணிக்காக விளையாடும்போது, தொடரின் வெற்றிதான் முக்கியம். தனிப்பட்ட சாதனைகள் இரண்டாம் பட்சம்தான்’’ என்றும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், பெரும்பாலான ரசிகர்கள் கம்பீரின் பேச்சுக்கு எதிராகவே தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.