திருச்செந்தூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெய்வானை யானைக்கு கஜபூஜை நடந்தது. திருச்செந்தூர் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வஉசி திடலில் 9.5 அடி உயரம் கொண்ட கல்வி கணபதி சிலையும், சுப்பிரமணியபுரம், அண்ணா காலனி, கோயில் தெரு, ஜீவா நகர், முத்துமாலையம்மன் கோயில் தெரு, சண்முகபுரம், ராணிமகாராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி நகர தலைவர் முத்துராஜ் தலைமை வகித்தார்.
நகர செயலாளர்கள் வேல்முருகன், முனியாண்டி, நகர பொருளாளர் பட்டுஇசக்கி, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் திருச்செந்தூர் பகுதியில் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சண்முக விலாச மண்டபத்தில் வைத்து கஜ பூஜைகள் நடந்தது.
இதில் கோயில் யானை தெய்வானைக்கு அலங்காரம் செய்யப்பட்டு யானைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.