பெங்களூரு: ககன்யான் திட்டம் என்பது மனிதர்களை விண்வௌிக்கு அனுப்பி, பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு திரும்ப அழைத்து வருவதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் விண்வௌி பயணத்தின்போது விண்வௌி வீரர்களுடைய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான பாராசூட் அமைப்பின் செயல்பாட்டு திறனை சோதனை செய்ய நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில், “ககன்யான் விண்வௌி பயணத்துக்கு இந்த சோதனை மிகவும் முக்கியமானது. விண்வௌியில் இருந்து பூமிக்கு திரும்பும்போது விண்கலத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக தரையிறங்க பாராசூட் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று(நேற்று) நடந்த சோதனையில் பாராசூட் அமைப்பின் செயல்திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது. டி.ஆர்.டி.ஓ., இந்திய விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை ஒருங்கிணைந்து இந்த சோதனையை செயல்படுத்தின” என்று தெரிவித்தனர்.
* ககன்யான் வீரர்களுக்கு பாராட்டு
இஸ்ரோவின் முதல் மனித விண்வௌி பயண திட்டத்தில் விண்வௌி சென்ற குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா மற்றும் பயண குழுவில் இடம்பெற்றிருந்த குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் ஆகியோர் நேற்று கவுரவிக்கப்பட்டனர். டெல்லியில் நடந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு விண்வௌி வீரர்களை பாராட்டி, கவுரவித்தார்.