புதுடெல்லி: ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய முதல் இந்திய விண்வெளி வீரராக சாதனை படைத்து இந்தியா திரும்பிய சுபான்சு சுக்லா நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து தனது விண்வெளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வைரலானது.
அதில் சுபான்சு சுக்லா, ‘‘இந்தியாவின் ககன்யான் திட்டம் குறித்து உலகம் முழுவதும் மிகுந்த ஆர்வம் உள்ளது. ஆக்சியம்-4 திட்டத்தில் இருந்த எனது குழு உறுப்பினர்கள் பலரும் ககன்யான் ஏவுதல் பற்றி அறிய விரும்பினர். அவர்கள் ககன்யானில் பயணிக்க விரும்புகின்றனர். இந்தியாவின் எதிர்கால விண்வெளி பயணங்களுக்காக 40 முதல் 50 விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவை தயார் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது’’ என பிரதமர் மோடியிடம் கூறி உள்ளார்.